சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் தனது படத்துக்கு “தி லெஜண்ட்” என்று தலைப்பு வைத்திருப்பதன் மூலம் தகுதியில்லாதவர்களையும்கூட அவ்வாறு வியக்கும் நமது சமூக மனவெடிப்பை பகடி செய்திருக்கிறார் என்றே முதலில் நினைத்தேன். படம் பார்த்த பிறகுதான் புரிந்தது, ஒளிவு-மறைவில்லாத பொழுதுபோக்கு படத்தின் வழியே “சீரியஸான” ஒரு செய்தியைப் பார்வையாளர்களுக்கு கடத்த விரும்பியிருக்கிறார் என்று.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி சகட்டுமேனிக்கு எல்லாத் தரப்பினரையும் பாதித்து வரும் சர்க்கரை நோய்க்கு ஒரே மருந்தில் நிவாரணம் கிடைத்தால் எப்படி இருக்கும்…? அப்படியான ஒரு விஞ்ஞானியின் முயற்சியையும் அதற்கு எதிராக இயங்கும் உலகளாவிய “மெடிக்கல் மாஃபியா”வையும் பார்வையாளர்களுக்குப் புரியும்படியாக கவனப்படுத்தியிருக்கிறார், “தி லெஜண்ட்” படத்தின் நாயகன் “அண்ணாச்சி” சரவணன் அருள்.

பணம் இருப்பதால் கோடிகளைக் கொட்டி தனது சினிமா ஆசையைத் தீர்த்துக்கொண்டார் என்று போகிறபோக்கில் சொல்லிவிட முடியாது. பணம் அவருக்கான வாய்ப்பை எளிதாக்கியிருக்கிறது. அது கடந்து, எல்லா வகையிலும் அவரது கடும் உழைப்பு காட்சிகளில் தெரிகிறது, இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி ஒத்துழைப்புடன்.

கலைத் துறைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிறார்கள். வருகிறார்கள். ஒரு தொழிலதிபர் வரக்கூடாதா? வந்திருக்கிறார், அதுவும் 52 வயதில். அறிமுகமாகி பல படங்களில் நடித்த பிறகும்கூட, படங்களில் “வந்து-போகும்” நடிகர்களைப் பார்த்த நமக்கு, அண்ணாச்சி ஆச்சரியமளிக்கிறார்.

அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் அற்புதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லைதான். (தொழிலதிபராக அவர் மீது விமர்சனங்கள் இருக்கலாம்.) ஆனால் அவரது திரை முயற்சியில் நேர்மை தெரிகிறது.

– சுகதேவ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *