நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி

ஒளிப்பதிவு: எஸ்கே செல்குமார்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

தயாரிப்பு: சூர்யா – ஜோதிகா

எழுத்து – இயக்கம்: முத்தையா

பொதுவாக தமிழ் சினிமாவில் அப்பா – மகன் பாசக் கதைகளைத்தான் அடித்துத் துவைத்துக் காயப்போடுவார்கள். விருமன் கதையில் அப்பா – மகன் மோதல்தான் களம்.

தன் கண்ணெதிரே தீயில் வெந்து கருகுகிறார் தாயார் சரண்யா. அந்த கொடூர மரணத்துக்கு முழுக் காரணமாக இருந்த தந்தை பிரகாஷ் ராஜ் மீது கொலைவெறியில் இருக்கும் கார்த்தி, தாய் மாமன் ராஜ்கிரணிடம் வளர்கிறார். பணம், சொத்து மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் என நினைத்து ஆணவமாகவும் கேவலமாகவும் நடந்து கொள்ளும் பிரகாஷ்ராஜை அடக்கி வழிக்குக் கொண்டு வருவதுதான் விருமன் கதை.

மடித்துவிடப்பட்ட அரைக்கைச் சட்டை, ஏத்திக் கட்டிய வேட்டி, கலைந்த தலைமுடி, முறுக்கு மீசை என ‘பருத்தி வீர கொம்ப கடைக் குட்டி சிங்கமாக’ கார்த்தி தோன்றினாலும், ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை தனது அழுத்தமான முரட்டுத்தனமான நடிப்பால் கட்டிப் போடுகிறார். சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். அவரிடம் அடிவாங்குபவர்கள் ஒரு அடி ஆழத்துக்கு மண்ணில் புதையுமளவுக்கு முரட்டடி! காதல் காட்சிகளிலும் அண்ணன் அண்ணிகளிடம் பாசம் காட்டுவதிலும் உருக வைக்கிறார்.

தாய்மாமனாக வரும் ராஜ்கிரண் வழக்கம் போல, தான் வரும் காட்சிகளிலெல்லாம் நமக்குள் இறங்கிவிடுகிறார். தன் தங்கையை திருமணம் செய்துகொண்டு பிரகாஷ்ராஜ் படுத்தும் கொடுமைகளைச் சொல்லிக் கலங்கும்போது நம்மையும் கலங்க வைக்கிறார்.

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் அதிதி ஆச்சர்யப்படுத்துகிறார். நடனம், வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் அனுபவசாலி நடிகையாக இயல்பாகச் செய்திருக்கிறார்.

பெற்ற மகன் மீதே வெறுப்பையும் கோபத்தையும் உமிழும் தந்தையாக பிரகாஷ் ராஜ். மிக இயல்பாகச் செய்திருக்கிறார். ஆனாலும் பல காட்சிகளில் ஏனோ அவர் மீது கோபத்துக்கு பதில் சிரிப்புத்தான் வருகிறது.

நான்கு காட்சிகள் என்றாலும் கருணாஸின் பாத்திரம் மனசில் பதியுமளவுக்கு உள்ளது. கார்த்தியின் தோழனாக வரும் சூரியின் கதையோடு இணைந்த நகைச்சுவை அவ்வப்போது சிரிக்க வைக்கிறது.

சரண்யா, இளவரசு, ஜிஎம் சுந்தர், ஓஏகே சுந்தர், ஆர்கே சுரேஷ். மனோஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளம். அனைவருமே ஒருவிதத்தில் கவனிக்க வைக்கிறார்கள்.

டைட்டிலிலேயே தொடங்கிவிடுகிறது யுவன் ஷங்கர் ராஜாவின் அட்டகாசம். டைட்டில் பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். எண்பதுகளில் கேட்ட அதே குரல் மாதிரி ஆச்சர்யப்படுத்துகிறார். கஞ்சாப்பூவு கண்ணால பாடலிலும், பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார் யுவன்.

முறுக்கேத்தும் முரட்டுத்தனமும் உருக்கும் பாசமும் கொண்ட கதைக் களத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் செல்குமார்.

வழக்கமான முத்தையாத்தனமான திரைக்கதை ஒன்றுதான் படத்தின் பெரிய குறை. சில இடங்களில் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை எளிதாக உணர முடிகிறது. குறிப்பாக பிரகாஷ் ராஜின் தங்கை, சரண்யாவின் ப்ளாஷ்பேக், விருமன் – எம்எல்ஏ சமரசம் போன்றவை.

ஆனாலும் படத்தை ரசிக்க இவை எந்த வகையிலும் தடையாக இருக்கவில்லை!

விருமன்… விறுவிறுப்பு… மண்வாசம்!

Rating: 3.5/5.0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *