கர்ணன் – ஒரு பார்வை

1

நீதியால் ஒடுக்கப்பட்ட மனிதக் கூட்டத்தின் கால்களில் கட்டப்பட்டுள்ள விலங்கினை உடைத்தெறிவதின் பின்னால் உள்ள தடைகள், வலி, வெறுப்பு, அழுத்தம், தேவை, யாவற்றுக்குமான நீதியையும் பேசுகிற படம்.
கலையம்சக் கோட்பாடுகளை மீறி, ரத்தமும் சதையுமான மக்களின் இயல்பான வாழ்வைத் தன் நாட்டாரியல் அறிவுடன் பிரதிபலிக்க முயற்சிக்கிற மாரிசெல்வராஜின் திரைமொழி வியக்க வைக்கிறது. சிலர், அசுரன்- பரியேறும் பெருமாள் படங்களோடு கர்ணனை ஒப்பீடு செய்து பேசும்போது, அவர்களைத் தாண்டி வந்துவிடுகிறேன்.

காரணம், ஒரு தீவிரமான காலகட்டத்தைத் தன் இளம்பிராயத்தில் கடந்துவந்தவன் மகத்தான கலைஞனாக உருவெடுக்கும்போது, அவன் தீட்டுகிற சித்திரம் எரியும் நெருப்பின் கரியிலிருந்துதான் பிறக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமா இதுவரை தன்மீது போர்த்தி வைத்திருக்கும் இருட்டுப் போர்வைகளை விலக்கிவிட்டு, ஆதிக்கத்தின் பின்னால் உள்ள ஒடுக்கப்பட்ட குரல்களுக்கான நீதியை, தேவையைப் பேசுவதற்கே முப்பது ஆண்டுகாலம் பின் தங்கி இப்போதுதான் கரையைத் தொட்டிருக்கிறது. ஆகவே, சற்று நிதானத்து, பாடமெடுக்க வாருங்கள்.

1995ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் வரைக்குமான மூன்று மாதகாலம் மறக்க முடியாத பல கோர தாண்டவங்கள் தென்மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் கிளம்பிய மீறல்களும், அதற்கு எதிரான ஆதிக்க மனநிலையின் ஆவேசமும் சிலரின் அரசியல் ஆதாயங்களும் ஊரைப் படுகளமாக மாற்றிய கொடுங்காலம் அது. எப்போது எந்தத் திசையில் இருந்து ஈட்டி வந்து பாயும் என்கிற அச்சமும் கொடூரமும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை ஆட்டிப் படைத்தன.

இந்த மூன்றுமாத காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட கொலைகள். பேருந்து தீ வைப்புச் சம்பவங்கள். பாலங்களைத் தகர்ப்பது, . மின்கம்பிவடங்களை அறுப்பது, பெட்ரோல் குண்டுகளை வீசுவது, குடிசைகளை எரிப்பது என்று கலவர வேள்வி வளர்த்தெடுக்கப்பட்டது.

யாரும் நினைத்தபடி வீட்டை விட்டு வெளியே வர முடியாது. போலீசாரின் துப்பாக்கிகள் வெடித்து அடங்கியதில் எண்ணிக்கையில் பெரும்பாலானோராகத் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். 1995 ஜூலை சிவகிரியிலும், அடுத்தமாதம் புதுக்கோட்டை சிங்காதங்குறிச்சியிலும், நடத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோர் மீதான காவல்த்துறையின் வன்முறை வெறியாட்டங்களில் தொடர்ச்சிதான் கொடியங்குளம் கலவரம். 1995ல் மணியாச்சி, கொடியங்குளம் கிராமத்திற்குள் கொலை வழக்கு ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு உள்ளே புகுந்த காவல்த்துறை ஊர் இளைஞர்களிடம் வெடி மருந்துகளும், பயங்கர ஆயுதங்களும் இருக்கிறது என்று வழக்குப் பதிந்தது.

600 பேர் கொண்ட பட்டாலியன் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த ஊரையும் நான்கு மணிநேரத்தில் ஒரு வீடு செங்கல் மிச்சமில்லாமல் அடித்து நொறுக்கியது. ரேசன்கடை அரிசியை வீதிகளில் கொட்டியது. டீவிப்பெட்டி முதல் சைக்கிள்களைக் கூட விட்டு வைக்காமல் தீவைத்துக் கொளுத்தியது. ஊர் மக்கள் குடிக்கும் கிணற்றில் டீசலையும், பூச்சுக் கொல்லி மருந்துகளையும் ஊற்றும் அளவுக்கு வஞ்சம் மிகுந்த சூறையாட்டம் அது. ஆனால், அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அரசு காவல்துறையின் வெறியாட்டத்தைப் பொய் என மறுத்தது.
காவல்துறையின் வன்முறைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது. ஆனாலும் போலீஸின் அறிக்கைப் பொய்யானது என்பதைக் கணக்கில் வராத இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் காட்டிக் கொடுத்தன. இறுதியில் 18பேர் கலவரத்தில் கொல்லப்பட்டதாக கொடியங்குளம் கலகத்தின் கதை நீதிபதி கோமதி நாயகம் கமிஷனின் விசாரணை மூலம் நடத்தி முடிக்கப்பட்டது.

இப்படி, கொடியன்குளம்- குறிஞ்சாக்குளம் – மாஞ்சோலை- வச்சாத்தி- வந்தவாசி- மாமண்டூர்- காஞ்சிபுரம்- ராமேஸ்வரம்- பசும்பொன்-முதுகுளத்தூர்-கீழத்தூவல்- துறையூர்- பரமக்குடி- கச்சநத்தம்…. என்று நீளும் 90களின் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான வன்முறை மிகுந்த பட்டியல்..

பதியப்படாத இந்த அநீதிகளின் பின்னால் உள்ள மக்களின் வாழ்வை, அவர்களது தேவையை, அவர்களது குரலை, கலகங்களைக் கலவரமாக்கும் பொய்களை… உடைத்தெறிந்து அவற்றைத் தன் கலை எனும் ஆயுதம் மூலமாகப் பதிவு செய்கிறார் மாரி செல்வராஜ். அதில் சமரசங்கள் வேண்டியிருக்கும்போதும், மிகச் சிறப்பாக குறியீட்டு மொழி அவருக்குப் பங்களிப்பு செய்கிறது.

வாழ்த்துகள் மாரி செல்வராஜ்…

வீழ்த்தப்பட்ட கதையைத் தொலைத்துவிட்டு, விழித்தெழுதல் பற்றி வகுப்பெடுக்க முடியாது!

கார்த்திக் புகழேந்தி