சென்னை: தமிழகத்தின் டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று (நவ.24) ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (நவ.25) இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் போடி, ராமநாதபுரம் கேவிகே பகுதிகளில் அதிகபட்சமாக தலா 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடல் பகுதிகள் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் (நவ. 24,25) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நவ.26-ம் தேதி சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *