டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் 27-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நாளாக நாளாக குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும், மாற்றுவழிகளைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதும் டெல்லி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆனால் மத்திய அரசோ இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில்தான் கவனம் செலுத்துகிறது என விமர்சனம் தொடர்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *