நடிகர்கள்: விஜய் ஆன்டனி, நந்திதா, மகிமா, நிழல்கள் ரவி
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
இசை: கண்ணன் நாராயணன்
இயக்கம்: சிஎஸ் அமுதன்

விஜய் ஆன்டனி ஒரு பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளர். மனைவியை இழந்த அவர், மகளுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார். திடீரென அவரது நண்பர் செழியன் சென்னையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்த சூழலில் அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கிறார் அவரது வளர்ப்புத் தந்தையும் பத்திரிகையின் ஆசிரியருமான நிழல்கள் ரவி. சென்னை வரும் விஜய் ஆன்டனி, தன் நண்பனின் கொலைக்கான பின்னணியை புலனாயத் தொடங்க, அதில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வருகின்றன. பெரிய கைகள் சில ஒரு குழுவாகச் சேர்ந்து இந்த மாதிரி கொலைகளைச் செய்வது தெரிய வருகிறது. எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பதை விஜய் ஆன்டனி கண்டுபிடிப்பதுதான் உச்சக் காட்சி.

தனது முதல் இரு படங்களில் நகைச்சுவையை முன்னிறுத்திய சிஎஸ் அமுதன் இந்தப் படத்தில் தீவிரத் தன்மைக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். குற்றப் பின்னணி கதைகளில் சற்றே வேறுபட்ட களம், நோக்கத்தை திரைக்கதையில் காட்டியிருக்கிறார். வித்தியாசமான முயற்சி என்றாலும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாத படத்தின் ஒரு குறை.

பத்திரிகை அலுவலக சூழல், வெறுப்புக் குற்றங்களுக்கான நோக்கம் போன்றவற்றை சொன்ன விதத்தில் சற்று ஏமாற்றமே.

புலனாய்வு பத்திரிகையாளர் வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் விஜய் ஆன்டனி. அவரது இறுக்கமான முகமும் உடல் மொழியும் அப் பாத்திரத்துக்கு சரியாக அமைந்திருக்கிறது. நந்திதாவை விட மகிமா நம்பியாருக்கு சுவாரஸ்யமான வேடம். சரியாகச் செய்திருக்கிறார். நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன் போன்றவர்களின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

கண்ணன் நாராயணனின் இசை பெரிதாக எடுபடவில்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் ஓட்டத்துக்குத் துணை நிற்கிறது.

இந்த வெறுப்புக் குற்றங்களுக்கான நோக்கம் வலுவாகக் காட்டப்பட்டிருந்தால், சில லாஜிக் மீறல்கள் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.

மதிப்பீடு: 3.0/5.0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *