800 பட விமர்சனம்

1

 

டிப்பு: மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், நாசர்
ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: விவேக்
இயக்கம்: எம்எஸ் ஸ்ரீபதி

பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவீாக்கப்பட்டிருக்கும் படம் 800.

இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த இந்தியத் தமிழர் குடும்பத்தில் பிறக்கிறார் முரளிதரன் (மதுர் மிட்டல்). அவரை ஒரு கிறிஸ்தவ, உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கிறார்கள் அவர் பெற்றோர். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவருக்கு அந்தப் பள்ளியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளி போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுக்கிறார். பிறகு பல சோதனைகளையும் சவால்களையும் கடந்து சர்வதேச அரங்கில் 800 விக்கெட்களை வீழ்த்தி உலகின் சிறந்த பந்துவீச்சாளராக அவர் எப்படி தலையெடுத்தார் என்பதே படத்தின் முழுக் கதை.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனைகளைப் படைத்த முத்தையா முரளிதரனின் கதையை, ஈர்க்கும் வகையிலான படமாகத் தரும் முயற்சியில் பெருமளவு வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி. அவருடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் சினேகன் கருணதிலகாவுக்கும் இதில் பங்குண்டு.

முத்தையா முரளிதரன் படைத்த சாதனைகளுக்கு நிகராக, அவரது பந்துவீச்சு குறித்த சர்ச்சைகளும் உண்டு. ஒரு தனி நபராக அவர் அந்த சர்ச்சைகளையும் சோதனைகளையும் கடந்த காட்சிகள் மனதில் பதியும் அளவுக்கு உள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி தலைவரை முரளிதரன் சந்திக்கும் காட்சி, இலங்கை இனப் போரால் இரண்டு தரப்பிலும் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் குறித்த முரளியின் வருத்தம், தமிழ் மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்ற அவரது உண்மையான அக்கறை போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர். கபில்தேவ், ஷேன் வார்ன் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யம்.

முரளிதரன் தனது 800-வது விக்கெட்டை எடுக்கும் பரபரப்பான கட்டத்தை உச்சக் காட்சியாக வைத்தது சிறப்பு. அந்த நிறையுடன் அரங்கிலிருந்து வெளியே வருகிறோம். ஒரு நல்ல கிரிக்கெட் போட்டி பார்த்த திருப்தி.

முத்தையா முரளிதரனாக வரும் மதுர் மிட்டல் தோற்றம், உடல்மொழி, பந்துவீச்சு என முத்தையா முரளிதரனைக் கண்முன் நிறுத்தினாலு், விஜய் சேதுபதியே நம் கண் முன் நிற்கிறார். தேவையற்ற சர்ச்சையில் ஒரு நல்ல கதையில் நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டார் விசே.

முரளியின் தந்தை முத்தையாவாக வேல ராமமூர்த்தி, தாயாக ஜானகி சபேஷ், பாட்டியாக வடிவுக்கரசி, மனைவி மலர்மதியாக மஹிமா நம்பியார், மூத்த பத்திரிகையாளராக நாசர், அர்ஜுன ரணதுங்காவாக, கிங் ரத்னம் என உடன் நடித்தவர்களும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலம். இலங்கையின் கண்டி, கொழும்பு, இனக்கலவரக் காட்சிகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு, கிரிக்கெட் ஆடுகளத்தில் போட்டிகள் நடப்பது என பல வகையான களங்களையும் சூழல்களையும் நேரில் பார்ப்பதுபோல் கண் முன் நிறுத்துகிறது ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு.

வாழ்க்கை வரலாற்றுப் படம் எனும்போது அதன் உண்மைத்தன்மைதான் படத்துக்கு அடிநாதம்். அந்த விஷயத்தில் மிகச் சிறப்பாக படத்தைக் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. இனப்பிரச்சினைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், அதற்குக் காரணம் யார், தமிழ் மக்கள் மீது இனவெறுப்பைத் திணித்தவர்கள் யார், தமிழர்கள் ஏன் அந்தப் பாதையைத் தேர்வு செய்தார்கள் என்பதையும் சொல்லியிருக்க வேண்டும். அதேபோல கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கு இந்தப் படம் எந்த அளவு தொடர்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் உள்ளது.

சில இடங்களில் வெறும் ஆவணப் பட உணர்வைத் தந்தாலும், ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமாக நிறைவைத் தந்திருக்கிறது 800.

மதிப்பீடு:ந 3.5/5.0