சென்னை: ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கைகோர்க்க பாஜகவில் இருந்து விலகிய அர்ஜுனமூர்த்தி, ரஜினி வராததால் தனிக்கட்சி தொடங்கினார்.இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

பல்வேறு தொழில்களை நடத்தி வரும் ரா.அர்ஜுனமூர்த்தி, ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவு சார் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரா.அர்ஜுனமூர்த்தி மனைவியின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக முன்னெடுத்த வேல் யாத்திரையில் ரா.அர்ஜுனமூர்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதொடர்பான விரிவான திட்டத்தை அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் அளித்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. அப்போதுதான், பாஜகவிலிருந்து விலகி, ரஜினியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்தார்.

ரஜினியும், தான் ஆரம்பிக்கப்போகும் கட்சிக்குப் பொறுப்பாளர்களாக அர்ஜுனமூர்த்தி மற்றும் தமிழருவி மணியனை அறிவித்தார். ஆனால் உடல்நலத்தை காரணம் காட்டி அரசியலில் இருந்து ரஜினி திடீரென விலகினார். இது அர்ஜுனமூர்த்திக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனாலும் தனது இரு கண்களில் ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி. அவரை விட்டு விட்டு எப்படி செல்வேன். ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன் என்று தெரிவித்தார்.

ஆனால் ஒரே மாதத்தில் தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்தார். ”இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். 2021 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக தனது கட்சிக்கு ரோபோ சின்னம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். எல்லாம் சுமூகமாய் போய் கொண்டிருந்த சூழலில் திடீரென சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார். அத்தோடு அவரது அரசியலும் அமைதியாகிவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ரஜினியைச் சந்தித்து ஆசிபெற்றார். பின்னர் கடந்த 18ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரா.அர்ஜுனமூர்த்தி, அவரது மனைவி மற்றும் மகள் சுவஸ்திதா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் அர்ஜுனமூர்த்தி.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவு:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *