வெப்பன் பட விமர்சனம்

1

சூப்பர் ஹ்யூமன் அதாவது அதிசய சக்தி மிக்க மனிதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் வெப்பன் (Weapon). அதாவது ஹாலிவுட் படங்களில் வரும் அதி உச்ச நாயகன் பாத்திரத்தை மையப்படுத்தி தமிழில் ஒரு முயற்சி செய்திருக்கிறார்கள்.

தொடக்கமே சற்று வித்தியாசமாகத்தான் யோசித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, யாராலும் அழிக்க முடியாத வீரர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது ஹிட்லரின் நாஜிப் படை அதில் பங்கேற்கும் ஒரு தமிழர், அந்த அதிசய மனிதர்களை உருவாக்கும் திறன்மிக்க திரவத்தை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு {சத்யராஜ்} அந்த திரவத்தைக் கொடுக்க, அவர் பின்னர் என்னவானார் என்பதுதான் இந்த வெப்பன் கதையின் அடிப்படை.

இந்த அதிசய மனிதனைத் தேடி இருவேறு குழுக்கள் புறப்படுகின்றன. அவற்றில் ஒன்று யூட்யூபர் வசந்த் ரவி மற்றும் அவரது நண்பர்கள். இன்னொரு குழு அறிவியல் தொழில் நுட்பம் மூலம் மக்களை மோசடி செய்யும் ராஜீவ் மேனன் தலைமையிலானது. இந்த இரு குழுக்களும் அதிசய மனிதனைத் தேடிப் புறப்படுகின்றனர். கண்டுபிடித்தார்களா,,, அதிசய மனிதன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.

அதிசய மனிதன்..அதாவது சூப்பர் ஹீரோ வேடத்தில் நடித்திருப்பவர் சத்யராஜ். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட நாயகன் வேடம். கச்சிதமாகப் பொருந்துகிறது. அதற்காக நிறைய வேலைகள் செய்திருக்கிறார்.

சத்யராஜுக்கு சமமான வேடத்தில் வசந்த் ரவி. அவருக்கு இணை தான்யா ஹோப். இருவரும் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ராஜீவ் மேனனுக்குப் பொருத்தமாக உள்ளது அவர் ஏற்றுள்ள வேடம்.

வேலு பிரபாகரன், கனிகா, மைம் கோபி, யாஷிகா ஆனந்த், வினோதினி, கஜராஜ் என நிறைய நடிகர்கள் சில காட்சிகளில் தலைகாட்டிப் போகிறார்கள்.

எடுத்துக் கொண்ட கதை சரியாக ஆரம்பித்தாலும், எங்கெங்கோ பயணித்து பார்ப்பவர்களை ஆயாசப்படுத்துகிறது.

ஒளிப்பதிவும் வரைகலைப் பணிகளும் சிறப்பாக இருந்தாலும், படத்தொகுப்பாளர் இஷ்டத்துக்கும் வெட்டித் தள்ளியிருக்கிறார்.

ஜிப்ரானின் இசையில் இரைச்சல் அதிகம்.

படத்தின் ஆகப் பெரும் பலவீனம் குகன் மெய்யப்பனின் திரைக்கதைதான். அதேபோல நிறைய ஹாலிவுட் படங்களிலிருந்து தழுவப்பட்டவை என பல காட்சிகள் பல்லிளிக்கின்றன.

தமிழிலும் ஹாலிவுட் மாதிரியான சூப்பர் ஹீரோ பாத்திரங்களை வடிவமைக்க முடியும் என நிரூபிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்திலேயே அடுத்த பாகத்துக்கான எடுப்பையும் காட்டித்தான் முடித்திருக்கிறார். அடுத்தடுத்த பாகங்களிலாவது அசலான காட்சிகள், அசத்தலான திரைக்கதையோடு வந்தால் நன்றாக இருக்கும்.

Rating: 2.5/5.0