திருப்பதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம், நாளை மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்கான காரணத்தை விக்னேஷ் சிவனே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை: தென்னிந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியான நடிகை நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9-ம் தேதி, அதாவது நாளை வியாழக்கிழமை திருமணம் நடக்க இருக்கிறது.
நயன்தாரா இந்த திருமணத்தை எந்தளவுக்கு எளிமையாக ரகசியமாக நடத்த திட்டமிட்டாரோ அதற்கு மாறாக அதைவிட அதிக பரபரப்பாக தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் அளவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமணத்தில் பணியாற்ற பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இரு வீட்டாரின் உறவினர்களையும் அழைத்து வந்து தங்க வைப்பதும், அவர்களுக்கு தேவையானவற்றைக் கவனித்துக் கொள்ளவும் தனித்தனியாக குழுக்கள் இருக்கின்றன. வி.ஐ.பி.களை வரவேற்கவும், மணமேடையை கவனித்துக் கொள்ளவும் ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விருந்து உபச்சாரத்தில் மட்டும் 50 பேர் கொண்ட குழு பணியாற்ற இருக்கிறது.
இந்த திருமணத்தில் ரஜினிகாந்த். அஜித் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது. முதல்வர் முக ஸ்டாலினும் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திருமண கோலாகலத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெரிய தொகைக் கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை படம் பிடிக்க பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது ஓடிடி தளம். விக்னேஷ் சிவன் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தங்கள் திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், “ஒரு இயக்குநர், எழுத்தாளராக என் வாழ்க்கையை தொடங்கினேன். இன்று ‘ரௌடி பிக்சர்ஸ்’ கம்பெனியை தொடங்கி அதன் மூலம் படங்களைத் தயாரித்து அதை ஆஸ்கர் வரைக்கும் கொண்டு சென்றோம். ஒரு பாடலாசிரியராக நான் எழுதிய பல பாடல்களை வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். நான் எடுத்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற எல்லா படங்களுக்கும் ஆதரவு கொடுத்தீங்க. நீங்க கொடுத்த ஒரு நம்பிக்கை என்னை வேலை செய்ய வைத்தது.
இவ்ளோ நாள் நீங்க கொடுத்த ஆதரவில் என் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு நான் போகப்போகிறேன். நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். முதலில் திருப்பதியில்தான் திருமணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இங்கிருந்து வி.ஐ.பி.களை அழைத்துச் செல்வது உள்பட பல காரணங்களால் அங்கு நடத்த முடியவில்லை. அதனால் மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்தோம். குடும்ப உறுப்பினர்கள், ஒரு சில நண்பர்கள் சூழ திருமணம் நடக்க இருக்கிறது என்பதை இந்த சந்திப்பில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். திருமணம் முடிந்தபிறகு தம்பதிகளாக மீண்டும் உங்களைச் சந்திப்பேன்,” என்றார்.