தற்கொலைக்கு முயலும் சுஜித் குமார் (ஆதித்யா பாஸ்கர்), அந்த முயற்சியில் தோற்று உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்படுகிறார். அதே மருத்துவமனையில் சுவாதியும் (அம்மு அபிராமி) சேர்க்கப்படுகிறார. அதே காரணம்தான்.
இருவரும் அவரவர் வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. தற்செயலாக நடந்த இவர்களின் சந்திப்பின் அடுத்தடுத்த நிகழ்வுகள் என்ன என்பது ஒரு கதை.
 அடுத்தடுத்து எத்தகைய நிகழ்வுகளுக்கு எடுத்துச் செல்கிறது என்பது ஒரு கதை.
அடுத்து, திருமணம் செய்துகொண்ட ஜோஷுவா (வினோத் கிஷன்) – ஜோதி (அபிராமி வெங்கடாசலம்) இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு வருகின்றன. அங்கு ஜோதிக்கு மூளைப் பக்கவாத நோய் ஏற்பட்டு இருப்பது தெரிய வருகிறது. நோயின் விளைவாக உடலில் ஒவ்வொரு பாகங்களாகச் செயலிழக்கும் என்ற நிலை. இந்நிலையில் தங்களது காதல் திருமணத்தால் பிரிந்த தனது தந்தையைப் பார்க்க விரும்புகிறார் ஜோதி. இந்த  சூழலை இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது இரண்டாவது கதை.
40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி சித்ராவுக்கு (லீலா தாம்சன்) இதயக் கோளாறு ஏற்படுவதை அறிகிறார் கணவர் சிவம் (டெல்லி கணேஷ்). அதைச் சரி செய்ய 7 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தைத் திரட்ட அவர் என்ன செய்கிறார் என்பதுதான் மூன்றாவது கதை.
அதாவது மூன்று தலைமுறை இணைகளின் கதை. இவற்றில் கடைசிக் கதையை தனது தேர்ந்த நடிப்பால் முதலிடத்துக்கு கொண்டு வந்துவிடுகிறார் டெல்லி கணேஷ். தனது வாழ்க்கைத் துணையை இழக்கப் போகிறோம் என்ற அவரது தவிப்பு பார்ப்பவர் மனதை கலங்க வைக்கிறது.
மற்ற இரு கதைகளின் நாயகர்கள் ஆதித்யா பாஸ்கர் மற்றும் வினோத் கிஷன் நடிப்பில் இன்னும் இயல்பான உடல் மொழி அமையவில்லை. அம்மு அபிராமி, அபிராமி வெங்கடாச்சலம் நடிப்பு பரவாயில்லை.
மூன்று கதைகளின் பிரச்சினையுமே, அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்க முடிவுதான்.
 ஒளிப்பதிவு, குறிப்பாக வெளிப்புறக் காட்சிகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உறுத்தாத இசை தந்திருக்கிறது ஆர் 2 ப்ரோஸ் கூட்டணி. 
முக்கியாக  படத் தொகுப்பாளர் அஜே மனோஜின் பங்குதான் இப்படத்தைப் பார்க்க வைக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *