புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த (மே) மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால் ஜூன் 1-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.இந்தநிலையில் புதுவையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரமாக இருந்த தொற்று பாதிப்பு 500க்கு கீழ் சரிந்தது. உயிரிழப்பும் குறைந்தது. ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது
இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதுடன் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மதுக்கடைகள் திறப்பு

ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சாராயம், கள், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாராயம், கள், மதுக்கடைகள் செயல்படலாம். அதே நேரத்தில் மது பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.