புதுவை: தமிழகத்தைவிட புதுவையில் பெட்ரோல் – டீசல் விலை குறைவாக இருப்பதால், மக்கள் தங்கள் வாகனங்களுடன் அங்கே படையெடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது.
பெட்ரோல் – டீசல் விலை கடந்த நவம்பர் மாதம் கட்டுக்கடங்காமல் உச்சத்தை தொட்டது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால்வரியை குறைத்தது. அதோடு மாநிலங்கள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டது.
தமிழகம் உட்பட சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. அதேநேரத்தில் புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. பெட்ரோலுக்கான வாட் வரி 23 சதவீதம் இருந்ததை 14.55 சதவீதமாக குறைத்தது. டீசலுக்கான வாட் வரியை 6.91 சதவீதமாக நிர்ணயித்தனர்.

இதனால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுவையில் ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாக உள்ளது.
இன்றைய தினம் புதுவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.22. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.104.30, கடலூரில் ரூ.103.12, திருவண்ணாமலையில் ரூ.103.60, சென்னையில் ரூ.102.63 ஆக உள்ளது.
அதேபோல புதுவையில் இன்றைய டீசல் விலை ரூ.86.33. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.95.36, கடலூரில் ரூ.95.40, திருவண்ணாமலையில் ரூ.95.24, சென்னையில் ரூ.94.24 ஆக உள்ளது. இதனால் புதுவையை சுற்றியுள்ள அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். இதனால் மாநிலத்தில் எல்லைப் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் வெளியில் இருந்து வரும் வாகனங்களும் புதுவையில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.
தமிழகப் பகுதிகளை எல்லையாகக் கொண்டுள்ள புதுவையின் இன்னொரு பகுதியான காரைக்காலிலும் இதே நிலைதான்.