70 ஆண்டுகளுக்கு முன் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பெருங்கதை. மணிரத்னம் இயக்கத்தில் இப்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. அதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனைப் படைத்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது.

 

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் முதல் நாளில் வசூலை வாரிக் குவித்து உள்ளது. உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன், 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தயாரிப்பாளர்கள் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், இப்படத்தின் இந்தி பதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் ரூ.42 கோடி வசூல் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *