காணாமல் போகும் ஸ்டுடியோக்கள் பட்டியலில் பிரசாத் ஸ்டுடியோவும் இணையட்டும்! – இளையராஜா

1

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தனது பெயரில் இன்று புதிய ஸ்டுடியோவைத் திறந்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் திரையரங்கை விலைக்கு வாங்கி, அதைப் புதுப்பித்து இளையராஜா ஸ்டுடியோ எனப் பெயர் சூட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பாடல் பதிவு இந்த ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது.

புதிய ஸ்டுடியோ திறப்பையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “ஒரு காலத்தில் சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிப் படங்கள் தயாராகி வந்தன. அவ்வப்போது இந்திப் படங்களும் தயாராகின. அன்றைக்கு விஜயா வாகினி, ஜெமினி, சாரதா, கோல்டன், நெப்டியூன், விஜயா கார்டன், ஏவிஎம் என ஏராளமான ஸ்டியோக்கள் இருந்தன. இன்று காணாமல் போய்விட்டன. அந்த வரிசையில் பிரசாத் ஸ்டுடியோவும் இணையட்டும் என நான் அங்கிருந்து வந்துவிட்டேன். இப்போது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இந்த இசை செல்ல வேண்டும் என்பதற்காக, நான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தில் இந்த இடத்தை விலைக்கு வாங்கிபுதிய ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளேன்,” என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கேள்வி: பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வந்துவிட்ட வருத்தம் உள்ளதா?

இளையராஜா: அதெல்லாம் ஒன்றும் இல்லை. வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம். நடந்து போகிறோம்.. நம் மீது மழைத் துளி விழுகிறது… காகத்தின் எச்சமும் விழுகிறது.. அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டா இருக்கிறோம். கடந்து போய்க் கொண்டே இருந்தால்தான் வாழ்க்கையில் உயரங்களை அடைய முடியும்.

கேள்வி: பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்து பணிகளைத் தொடங்கியுள்ளீர்கள். இந்த நாளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இளையராஜா: எனக்கு வாழ்க்கையில் எல்லா நாளும் ஒரே நாள்தான்.

கேள்வி: தமிழ் ரசிகர்களுக்கு இனி எந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் கிடைக்கும். என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளையராஜா (சிரித்தபடி): யோவ், மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தச் சமயத்தில் எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் அவர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படிப் பாடல்கள் போடுவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது? அதை யாராலும் சொல்ல முடியாது. மழை எப்போது வரும் என்று மழையிடம் கேட்க முடியுமா?

கேள்வி: இப்போது வரும் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே…

இளையராஜா: முக்கியத்துவம் தரும் அளவுக்கு இப்போதைய பாடல்கள் இல்லை என்று அர்த்தம். பாடல்தான் முக்கியத்துவத்தை எடுக்கணுமே தவிர. நீ கொடுக்க முடியாது…. பாடல் உன்னைப் பிடித்து இழுக்க வேண்டும். நீயா வேணும்னு போட்டின்னா அதுக்கு முக்கியத்துவம் கிடைக்காது.