கோவையில் மனைவி மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் மோகனுக்கு திடீரென ஒரு அதிர்ச்சி. அவரது மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறது. பெயரை இப்ராகிம் என்று மாற்றிக் கொண்டு மகளின் தற்கொலைக்குக் காரணம் தேடிப் புறப்படுகிறார் மோகன். இதற்கிடையில் மோகனால் முன்பு பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார். மகளின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தாரா, அவரைத் தேடிக் கொண்டிருந்த காவலர் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக் கதை.

14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மோகன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் இந்த ஹரா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் நடித்திருக்கும் படம் என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை நிறைவேற்றும் வகையில் திரைக்கதையை அமைக்கத் தவறிவிட்டார் இயக்குநர்.

இது ஒரு பழிவாங்கல் கதையாகவே இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்க்கும் ஆர்வத்தைத் தொடர வைக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்!

டப்பிங். கலைஞர்களின் நடிப்பு, வசனங்கள், குறிப்பாக மோகன் குரல் எதுவுமே ஒரு தொழில்முறை திரைப்படத்துக்கானதாகவே இல்லை.

மோகனின் நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை, உணர்வுகளை நன்றாகவே வெளிக்காட்டி இருக்கிறார். ஈகோ பார்க்காமல் ஒரு டப்பிங் கலைஞரை வைத்துப் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார் அனுமோல். எதற்காக இப்படி ஒரு நீதிமன்றக் காட்சி… அதுவும் யோகி பாபு இருந்தும் கடுப்பேற்றுகிறது.

இது ஒரு சாதாரண பழிவாங்கும் கதை. இதில் எதற்கு தீவிரவாதம், போதை மருந்து கடத்தல் என்பதெல்லாம் சுத்தமாகப் புரியவில்லை.

தொழில்நுட்ப ரீதியாகவும் பெரிதாகப் பாராட்ட எதுவும் இல்லை.

மோகனுக்கு வெள்ளி விழா நாயகன் என்ற பெயர் இப்போதும் உண்டு. அப்படி ஒரு பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, குறைந்தபட்சம் நல்ல திரைக்கதையைத் தேர்வு செய்ய வேண்டாமா?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *