நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், மணிகண்டா, ஆடுகளம் நரேன்

ஒளிப்பதிவு: கோகுல் பெனோய்

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: எஸ்பி சௌத்ரி

இயக்கம்: கின்ஸ்லி

ஒரு கொடூரக் கொலையில் தந்தையை இழக்கும் ஐஸ்வர்யா, அவர் ஓட்டி வந்த கால் டாக்சியை வேலையைக் கையில் எடுக்கிறார், வாழ்க்கையை ஓட்ட. உடனிருக்கும் தம்பி வீட்டை அடகுவைத்துவிட்டு எங்கோ ஓடிவிட, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயைப் பார்த்துக் கொண்டு போராட்ட வாழ்க்கை. இந்த சூழலில் ஒருநாள் அரசியல்வாதி ஆடுகளம் நரேனைக் கொலை செய்யும் நோக்கில் ஒரு கூலிப்படை ஐஸ்வர்யாவின் காரில் ஏறுகிறது. அவர்களைத் துரத்துகிறது போலீஸ். இந்தக் கூலிப்படையிடமிருந்து ஐஸ்வர்யா எப்படித் தப்பிக்கிறார், ஆடுகளம் நரேனைக் கொல்கிறார்களா? ஐஸ்வர்யாவின் தந்தை எப்படிக் கொலையானார் என்பதையெல்லாம் ஒரு பரபர கார் பயணத்தை வைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

சாலைப் பயணத்தை மையமாக வைத்து இரண்டு மணி நேரத்தில் ஒரு விறுவிறுப்பான த்ரில்லரைத் தரவேண்டும் என்ற இயக்குநரின் நோக்கம் சரியானதுதான். ஆனால் அதை சுவாரஸ்யமாகச் சொல்வதில் சற்றே சறுக்கியிருக்கிறார் என்பதைச் சொல்லாமலிருக்க முடியாது.

கண்முன்னே கொடூரமாகக் கொல்லப்படும் அப்பா, அந்த அதிர்ச்சியில் பக்கவாதம் தாக்கப்பட்டு படுக்கையில் விழும் அம்மா, உதவாத தம்பி, கூடவே தான் விரும்பிய ஓட்டுநர் வேலை… என முதல் பாதியில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு சரியான தீனி. ஆனால் இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சி வரை ஒருவித இறுக்கமான முகத்துடனே அவர் வருவதுதான் உறுத்தல்.

ஆடுகளம் நரேன் அடித்து ஆடியிருக்கிறார். மணிகண்டனும் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நகைச்சுவை என்ற பெயரில் வரும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. அதேபோல, ஒரு கூலிப்படையைத் துரத்திப் பிடிக்கும் போலீசாரின் செயல்கள் கோமாளித்தனமானகவே தெரிகின்றன.

ஒளிப்பதிவு, இசை இரண்டுமே படத்தின் ஓட்டத்துக்குக் கைக் கொடுக்கின்றன. படத் தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தேவையற்ற பாடல் காட்சிகள், அபத்தமான காதல் காட்சிகள், அதிரடி என்ற பெயரில் சண்டைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, சொல்ல வந்த கதையை சீரான ஓட்டத்துடன் சொன்னதற்காக இயக்குநர் மற்றும் குழுவினரபை் பாராட்டலாம்.

மதிப்பீடு: 3.0/5.0

– அனிதா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *