வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வானார். ஆனால் இப்போதைய அதிபரான டிரம்ப் ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்தத் தேர்தலில் மோசடி நடந்துவிட்டதாக தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிபர் டிரம்ப் தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

பல குடியரசுக் கட்சியினர் சட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளனர், ஆனால் டிரம்ப்பின் இந்த முடிவு கட்சிக்குள் ஒரு சிறிய பிளவை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமையன்று பென்சில்வேனியாவில் டிரம்ப்பின் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நியூஜெர்சி முன்னாள் கவர்னரான கிறிஸ்டி கூறுகையில், “அதிபரின் சட்டக் குழுவின் நடத்தை ஒரு தேசிய சங்கடமாக இருந்து வருகின்றது. டிரம்ப் முகாம் பெரும்பாலும் நீதிமன்ற அறைக்கு வெளியே தேர்தல் மோசடி பற்றி விவாதிக்கிறது, ஆனால் அவர்கள் நீதிமன்ற அறைக்குள் செல்லும்போது அவர்கள் மோசடி பற்றி வாதிடுவதில்லை.

நான் டிரம்பின் ஆதரவாளராக இருந்தேன், நான் அவருக்கு இரண்டு முறை வாக்களித்தேன். ஆனால் தேர்தல்கள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன, இங்கு எதுவும் நடக்காதது போல் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாது,” என கூறினார்.

டிரம்பை 2016 ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்த முதல் ஆளுநர் கிறிஸ்டி ஆவார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பைடனுடனான விவாதங்களுக்கு டிரம்ப்பை தயார்படுத்தவும் அவர் உதவினார்.

மேரிலாந்து ஆளுநர் லாரி ஹோகன் கூறும் போது தேர்தல் முடிவுகளை முறியடிக்க டிரம்ப் முகாமின் தொடர்ச்சியான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியை தழுவுகின்றன. இதனால் நாங்கள் ஒரு பலவீனமானவர்கள் போல தோற்றமளிக்கிறோம் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *