சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர்.

இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார். இதுதவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் மட்டுமே ஓட்டுப் போட்டனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி வளாகத்தில் இன்று காலையில் தொடங்கியது. இதில், தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேனப்பன் 87 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள முரளி, மறைந்த பிரபல இயக்குநரும் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ராம நாராயணனின் மகன். தயாரிப்பாளர் சங்கத்தின் மிகுந்த மதிப்புக்குரிய தலைவராகத் திகழ்ந்தவர் ராம நாராயணன். 2011ல் தமிழகத்தில் திமுக ஆட்சி முடிந்து, அதிமுக பொறுப்புக்கு வந்ததும், தார்மீக அடிப்படையில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் ராம நாராயணன். 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் முரளி அதே பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *