சித்திரைச் செவ்வானம் – ஒரு பார்வை

1

டிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் ‘சித்திரை செவ்வானம்’. சண்டை காட்சிகளை இயக்கி கொண்டிருந்த சில்வா இந்த படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். படத்திற்கான கதையை இயக்குனர் விஜய் எழுதியிருக்கிறார்.

ஒரு சென்டிமெண்ட், ஆக்ஷன் படம். சமுத்திரகனி, ரீமா கல்லிங்கல் சாய்பல்லவியின் தங்கை பூஜா என நட்சத்திர வேல்யூ, மார்கெட் மதிப்பில் இருக்கிற விஜய்யின் கதை இரண்டரை மணி நேர புட்டேஜ். ஓடிடி தளத்தின் வியாபார கணக்கு சரியானது. ஆனால் படம் எவ்வளவு மோசமான ஒரு விஷயத்தை போதிக்கிறது என்று கவனித்தால் பகீரென்று இருக்கிறது.

தனது ஒரே மகள் டாக்டருக்கு படித்து மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க வேண்டும் என்பது தந்தை சமுத்திரகனியின் கனவு. நீட் பயிற்சி பெற கோச்சிங் செண்டரிலும், விடுதியிலும் சேர்த்து விடுகிறார். அங்கு மாணவர்களுடன் நடக்கும் மோதலில் 3 பெரிய இடத்து பசங்க மகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். அப்படி செய்தவர்களை அந்த ஏழை தந்தை பழிக்குப்பழி வாங்குவது கதை.
இதே பாணியில் ஏற்கெனவே நிறைய படங்கள் வந்து விட்டது. என்றாலும் மேலோட்டமாக பார்த்தால் இரண்டரை மணி நேர எண்டர்டெயின்மெண்ட் படம்தான். மகளை நாசமாக்கியர்களை சமுத்திரகனி கொல்லும்போது மனம் குதூகலிக்கிறது. மகளை மடியில் வைத்து அவர் அழும்போது கண்கள் கலங்குகிறது. இப்படி வெறும் உணர்ச்சிகளை தூண்டுவதா ஒரு படைப்பு?

பெரிய இடத்து பசங்களுக்கு ஒரு பெண்ணை பாலியல் வண்கொடுமை செய்யும் துணிச்சலை தந்தது எது? அதிகாரமா, அவர்கள் வளர்ப்பு முறையா?. பசங்க வெறும் வெறும் அம்புதான் அவர்களுக்கு உந்து சக்தி தருகிற வில் எங்கே என்று படம் தேடியிருக்க வேண்டும். பெண்களை மதிக்க கற்றுத் தராத சமூகத்தின் மீது பாய்ந்திருக்க வேண்டும்.

இப்படி பாலியல் வன்கொடுமை பண்ணும் கொடூரன்களை எல்லா தகப்பனாலும் வேட்டையாடி விட முடியுமா என்ன? பிரச்சினைக்கான ஆணி வேரை தேடாமல் படத்தில் காட்டப்படும் பிரச்சினைக்கு படத்திலேயே ஒரு முடிவை சொல்லி அந்த பிரச்சினை சமூத்தில் நீர்த்துப்போகாமல் இருக்கவே இது வழி செய்யும்.

இன்னொரு பக்கம் மகள் பூஜா. அவள் குளிக்கும்போது அந்த மாணவர்கள் வீடியோ எடுத்து செல்போனில் வெளியிட்டு விட்டார்கள். அதை மருத்துவம் படிக்க நினைக்கும் பூஜா எப்படி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். “டேய் பரதேசி உங்கம்மா குளிக்கும்போதும் இப்படித்தாண்டா இருக்கும்” என்று பதில் சொல்லி வீடியோ போட்டிருந்தால் அது புதுசு. அந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு, குளித்ததை படம் எடுத்தற்காக எதற்கு அவர்கள் காலில் விழுந்து கதற வேண்டும்.

அடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பூஜா தன் தந்தையின் கை தன் மீது படும்போது கூட “அப்பா என்னை தொடாதீங்கப்பா…” என்று பதறுகிறார். ஒட்டுமொத்த ஆண் இனத்தை பார்த்தே அவர் பதறுகிறாரா? அல்லது தனது உடலின் புனிதம் கெட்டுவிட்டது என்று பதறுகிறாரா?

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஏதோ ஒரு விதத்தில் செத்தே ஆக வேண்டும் என்பதே சினிமாவில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அவள் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவளாக்கப்படுகிறாள். இந்த படத்திலும் அதுதான் நடக்கிறது.
மகளை டாக்டராக்க விரும்பும் தந்தை முதலில் அவளுக்கு இந்த சமூத்தில் வாழ கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இந்த நவீன உலகத்தில் எப்போதும் உன்னை ஒரு மூன்றாவது கண் பார்த்துக் கொண்டே இருக்கிறது என்று புரிய வைத்திருக்க வேண்டும்.

பெண்ணின் உடல் புனிதமானதல்ல… அவளின் உள்ளமே புனிதமானது. பாலியல் வன்முறைக்கு பிறகு அதை ஒரு பெரும் விபத்தாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவளுக்கு சொல்லித் தந்திருக்க வேண்டும். கற்பும், புனிதமும் பெண்ணின் பிறப்புறுப்பில் இல்லை. மனதில்தான் உள்ளது என்று போதித்திருக்க வேண்டும்.

பெண்ணை மதிக்க கற்றுத்தராத இந்த சமூக்தை எதிர்த்து தந்தையின் போராட்டம் அமைந்திருக்க வேண்டும். தறுதலைகளை வளர்க்கும் ஆதிகார, ஆதிக்க வர்கத்துக்கு எதிராக அவர் நின்றிருக்க வேண்டும். அதுதான் உண்மையான படைப்பாக இருந்திருக்கும்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்ணை தெய்வமாக்கி, புனிதமாக்கி அவளை சீரழிப்பார்களோ தெரியவில்லை.

– மீரான், மூத்த பத்திரிகையாளர்.