நடிகர்கள்: அசோக் செல்வன், சாந்தனு, பிருத்வி, கீர்த்தி பாண்டியன்
ஒளிப்பதிவு: தமிழ் அ அழகன்
இசை: கோவிந்த் வசந்தா
தயாரிப்பு: நீலம் புரொடக்சன்ஸ்
இயக்கம்: எஸ் ஜெய்குமார்

ஊர் அரக்கோணம். அங்கே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் குழு, அதற்கு தலைவன் ரஞ்சித் (அசோக் செல்வன்). ஆதிக்க சாதியினரின் ஆல்பா கிரிக்கெட் குழு… அதற்கு தலைவன் ராஜேஷ் (சாந்தனு). இந்த இரண்டு அணிகளுக்கும் தொடர் பகை. ஆனால் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் இணைந்து வெளி அணியை எதிர்த்து ஆட வேண்டிய சூழல். அதைத் தடுக்க ஆதிக்க சாதியினர் போடும் முட்டுக் கட்டைகள். அவற்றைத் தாண்டி இரு அணிகளும் சாதிய பேதங்கள் மறந்து இணைந்து நின்று ஆடி கோப்பை வென்றார்களா என்பதுதான் இந்த ப்ளூ ஸ்டார் படத்தின் மையக் கதை.

ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களும் ஆதிக்க சாதி இளைஞர்களும் கிரிக்கெட் உணர்வால் ஒன்றுபடுவதை காதல் சுவாரஸ்யத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் மட்டுமல்லாமல் சமூக, அரசியலும் சற்று விரிவாகவே பேசப்பட்டிருக்கின்றன. யாரையும் எதிரியாகவோ குற்றவாளியாகவோ சித்தரிக்காமல், எல்லோரையும் அவரவர்க்கே உரிய இயல்புடன் சித்தரித்திருப்பது இந்தப் படத்தின் சிறப்பு.

குறிப்பாக மது, வன்முறைகளிலிருந்து இளைஞர்களைக் காக்க விளையாட்டு ஒரு அற்புத வழி என்பதை வலியுறுத்தியதற்காகவே பாராட்ட வேண்டும்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களின் போக்கு மற்றும் உச்சக் காட்சிகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தப் படத்திலும் அமைந்துள்ளன என்றாலும் பார்ப்பவர் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்ட விதத்தில் படம் வெற்றி கண்டிருக்கிறது.,

அசோக் செல்வன் ப்ளூ அணி தலைவனாக மனதைக் கவர்கிறார். அச்சு அசலாக 90களின் இளைஞர் தோற்றம், அந்த உடல் மொழி என முழுமையான நடிகராக பரிமளிக்கிறார்.

முதல் முறையாக சாந்தனும வெகு இயல்பாக ‘நடித்திருக்கிறார்’ இந்தப் படத்தில். இதை அவர் எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும்.

பக்ஸ், பிருதிவிராஜன், கீர்த்தி பாண்டியன், நாயகனின் அம்மா லிஸி ஆண்டனி, அப்பா இளங்கோ குமரவேல் என உடன் நடித்த அனைவருமே மிகையற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

அரக்கோணத்தின் சுற்றுப் புறத்தை, வளர்ந்த புல்புதற்களின் நடுவே மெல்லமாய் வரும் புறநகர் ரயில்களை, வட ஆற்காடு மாவட்டத்துக்கே உரிய செம்மண் போர்வையை வெகு இயல்பாக படம்பிடித்திருக்கிறார் தமிழ் அ அழகன்.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்துக்கு இன்னும் அழுத்தம் தருகிறது.

சாதிய பாகுபாடுகளை திரையில் காட்டுவதாகக் கூரி சமூகத்தை மேலும் பிளவுபடுத்தாமல், விளையாட்டின் மூலம் அந்த வேற்றுமைகளை முடிந்தவரை களையலாம் என்ற நேர்மறைச் சிந்தனையை விதைத்தமைக்காக ப்ளூ ஸ்டார் குழுவுக்கு பாராட்டுகள்!

மதிப்பீடு: 3.5/5.0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *