புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவரை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிளந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும். என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமோ வன்மமோ இல்லை,” என்று தெரிவித்தார்.

முன்னதாக கல்லூரி மாணவிகளிடம் பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் என்னை சார் என்று அழைக்க வேண்டாம். கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் அண்ணா என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள்,” என்றார். ராகுல் காந்தி இப்படிச் சொன்னதும், அவரை ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக அவருடன் பேசினார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *