நடிகர்கள்: மெட்ரோ சிரிஷ், மிருதுளா, அருந்ததி நாயர், செந்தில், யோகி பாபு, சதீஷ்

ஒளிப்பதிவு: எம் விஜய்

இசை: தரணி குமார்

தயாரிப்பு: புவனேஸ்வரி

இயக்கம்: ரமேஷ் பாரதி

மணப்பெண்களைத் தூக்கி, கடைசி நேரத்தில் வெட்டி திருமணத்தை வெட்டி விடுவதையே தொழிலாகச் செய்யும் இளைஞனின் திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள், கலாட்டாக்களை நகைச்சுவையாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் சம்மதமில்லாமல், காதலன் அல்லது காதலியுடன் சேர விரும்புவோருக்கென்றே நண்பர்கள் துணையுடன் சேவை மையம் நடத்தி வருகிறார் சிரிஷ். ஒரு கட்டத்தில் அவருக்கும் ஒரு காதலி கிடைக்கிறார். ஆனால் சிரிஷின் தொழில் அறிந்து, அவரை வெறுத்து ஒதுக்குகிறார். குறிப்பிட்ட நாளுக்குள் சிரிஷுக்கு திருமணம் நடக்காவிட்டால் குடும்பத்துக்கே ஆபத்து என ஜோதிடர் கூறிவிட, பெண் பார்க்கும் படலம் தொடங்குகிறது. ஆனால் பெண் கிடைத்தபாடில்லை. பெண் இல்லாமலேயே திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள் சிரிஷின் நண்பர்கள், யாராவது ஒரு பெண் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில். மணப்பெண் கிடைத்தாரா என்பது கலகலப்பான, அதேநேரம் மனதைத் தொடுகிற முடிவு.

சுந்தர் சி பாணி கதை, காட்சி அமைப்புகள் படத்தை நெளியாமல் பார்க்க ரொம்பவே உதவுகின்றன. கதையின் நாயகனாக மெட்ரோ சிரிஷ். ஆங்காங்கே சற்று செயற்கைத்தனம் தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக தேறிவிடுகிறார்.

நாயகியாக வரும் மிருதுளாவை விட, அவர் தோழியாக வரும் அருந்ததிக்கு முக்கியத்துவம் அதிகம். ஏன் என்பது உச்சகட்டக் காட்சியில் தெரிகிறது. இருவருமே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சதீஷ், யோகி பாபு, சாமிநாதன் காமெடி அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறது. சிரிஷின் தந்தையாக வரும் ஞானசம்பந்தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். செந்திலை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. 

தரண்குமாரின் பின்னணி இசை, அழகுல ராசாத்தி பாடல் கவனிக்க வைக்கிறது. எம் விஜய்யின் ஒளிப்பதிவில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுபள்ள பகுதிகளைப் பார்ததுமே ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் ரமேஷ் பாரதி. எடுத்துக் கொண்ட களம், கதை இரண்டுமே சற்று வித்தியாசமானதுதான். அதை இன்னும் சிறப்பாக சொல்லியிருந்தால் இன்னொரு களவாணியாக வந்திருக்க வேண்டிய படம் இது.

மதிப்பீடு: 3.0 / 5.0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *