அமேசான் காட்டில் பிறந்த பழங்குடி இனத்தவரான கூகுள் (சந்தானம்), சொந்த மண்ணை இழந்து அடையாளம் இழந்து, கடல் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, போகுமிடமெல்லாம் ஒடுக்குமுறைக்குள்ளாகி ஒருவழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைகிறார். இங்கே நாடி வந்து கேட்பவர்களுக்கெல்லாம் ஓடி ஓடி உதவுகிறார். அப்படி வரும் ஒரு நண்பர் கூட்டம் ஆள் கடத்தல் பிரச்சினையில் உதவி கேட்க, அவர்களுக்கு உதவப் போகும் சந்தானம் ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார். அவற்றிலிருந்து எப்படி வெளி வருகிறார்… நண்பர்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை சிரிப்பும் சற்று சீரியஸாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கமான நக்கல், குசும்பு, இடக்கு என அத்தனையையும் அப்படியே ஓரங்கட்டிவிட்டு, படு சாந்தமான சந்தானம். பார்க்க ஆச்சர்யமாக மட்டுமல்ல, நன்றாகவும் இருக்கிறது. அவரது நண்பர் கூட்டத்தில் வரும் கவி, ஹரிஷ், யுவராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் கவனிக்கும்படி செய்திருக்கிறார்கள்.

சந்தானம் படத்தில் நாயகிக்கு என்ன வேலையோ அதுதான் இந்தப் படத்திலும் அதுல்யாவுக்கு. பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ் ஆகியோரும் தனித்துத் தெரியும் அளவுக்கு அவர்களது பாத்திரங்களை அமைத்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

நகைச்சுவைக் காட்சிகள் பாதி ரசிக்கும்படி உள்ளன. மீதி புரிவதற்குள் கடந்து போகின்றன. பழங்குடி மக்கள், மொழி அரசியல், ஈழ மக்கள் பிரச்சினை என பல விஷயங்களைப் பேச முயன்றிருக்கிறார் ரத்னகுமார். பப்ஜி விளையாட்டை மையப்படுத்தி வரும் காட்சிகள் புதுமை.

படத்தின் இன்னொரு கூடுதல் அம்சம் சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் பாடல்கள். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஒரு பயணப்படத்துக்கான நிறைவைத் தருகிறது.

படத்தின் இறுதிக் காட்சிகள் இன்றைய இளைஞர்களின் போக்கைப் புரிந்து வைக்கப்பட்டிருக்கிறது. சரியாகவே எடுபட்டிருக்கிறது.

திரைக்கதையில் ஆங்காங்கே தடுமாற்றங்கள் தெரிகிறது. அதை நகைச்சுவைத் துணுக்குத் தோரணம் கட்டி மறைக்கப் பார்த்திருக்கிறார் இயக்குநர். சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், சந்தானம் ரசிகர்களுக்கு, வழக்கமான சந்தானத்தை எதிர்ப்பார்த்துப் போகும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் குலுகுலு!

Rating: 3.0/5.0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *