‘ஃபாரின் சரக்கு’ பட விமர்சனம்

2
  • குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலையும், அந்த பதிலுக்கும் ‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்புக்கும் உள்ள தொடர்பையும் பரபரப்பான திரைக்கதையோடும், சில ட்விஸ்டுகளோடும் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், படத்தின் கதைக்களமும், அதை படமாக்கிய விதமும் சற்று வித்தியாசமாக உள்ளது. திரைக்கதையை இன்னும் செம்மைப்படுத்தி இருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

மகாலிங்கம் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன், பொருத்தமாக இருப்பதோடு நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார். சுரேந்தர் சுந்தரபாண்டியனும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் கதாநாயகிகளாக அல்லாமல் கதையின் நாயகிகளாக இயல்பாக நடித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்ட முயன்றிருக்கிறார்கள்.

பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளில் ஓகே.

ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜன் பயணித்திருந்தாலும், இரவு காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கூடுதல் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்துவிட்டு படத்தில் ஒரு இடத்தில் கூட மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைக்காமல், தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி.

முழுக்க முழுக்க புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த படத்தில் பட்ஜெட் காரணமாக சிறு சிறு குறைகள் இருந்தாலும், பார்க்க வைக்கிறது!