நடிகர்கள்: அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: ஜிவி பிரகாஷ்
தயாரிப்பு: ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்
இயக்கம்: ஹரி

யார் என்ன சொன்னாலும், விமர்சனம் செய்து நகையாடினாலும், தன் பாணியிலிருந்து சற்றும் பாதை விலகாதவர் இயக்குநர் ஹரி. காரணம், அவரைப் பொறுத்தவரை, அவரது தயாரிப்பாளரைப் பொறுத்த வரை, இந்த பாணிப் படங்கள் பெரும்பாலும் வசூலில் சொதப்பாதவை. இடையில் ஹரி எடுத்த சாமி 2 மட்டுமே எடுபடாமல் போனது. இப்போது மீண்டும் யானையில் தம் கட்டி இறங்கி அடித்திருக்கிறார் ஹரி.

கதை வழக்கமான குடும்ப பாசம், பகை, அந்தப் பகையிலிருந்து குடும்பத்தைக் காக்கும் நல்ல நாயகன். இதில் கூடுதலாக சாதி வெறிக்கு எதிராக சாட்டை எடுத்திருக்கிறார் ஹரி.

ராமேசுவரத்திலேயே பெரிய குடும்பம் பிஆர்வி. அவரது முதல் மனைவி மகன்கள் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவி. இரண்டாவது மனைவி ராதிகாவின் மகன் அருண்விஜய். அண்ணன்கள் தன்னை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தினாலும், அந்தக் குடும்பத்தையே யானை போல காத்து நிற்பவர் துடிப்பான அருண் விஜய்தான். அவரது காதலி பிரியா பவானி சங்கர். இந்த பிஆர்வி குடும்பத்துக்கும் சமுத்திரம் (வாஐசெ ஜெயபாலன்) குடும்பத்துக்கும் பெரும் பகை.

இந்த சூழலில் அண்ணன் சமுத்திரக்கனியின் மகள் ஒரு முஸ்லிம் இளைஞனுடன் ஓடிவிட, அதற்கு அருண் விஜய்தான் காரணம் எனக் கூறி அவரை வீட்டை விட்டே துரத்துகிறார்கள். கூடவே சென்றுவிடுகிறார் அம்மா ராதிகா, வேறு மதத்தைச் சேர்ந்த பையனோடு ஓடிப்போன தன் மகளையே கொல்ல உத்தரவிடுகிறார் சமுத்திரக்கனி. அந்தப் பெண்ணையும் பையனையும் அருண் விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார்? பிரிந்த இந்தக் குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்தது என்பதுதான் மீதிக் கதை. கொஞ்சம் தாமிரபரணி, வேல் படங்களை நினைவூட்டினாலும், பரபர திரைக்கதையால் நம்மைக் கட்டிப்போடுகிறார் ஹரி என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தைக் காக்கும் யானையாக, முறுக்கேறிய உடல்கட்டுடன் பரபரவென வரும் அருண் விஜய், ஹரிக்கேற்ற நாயகன். எந்த உறுத்தலுமில்லாமல் பார்வையாளர்களைக் கவர்கிறார். பாசம், கோபம், நெகிழ்ச்சி, உருக்கம் என உணர்ச்சிகளை அளவாகக் காட்டி அசத்துகிறார்.

அவரது கிராமத்துக் காதலியாக வரும் பிரியா பவானி சங்கர் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். சமுத்திரக்கனி, ராதிகா, ராஜேஷ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ என அத்தனை பேரும் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். யோகிபாபுவின் நகைச்சுவை தோரணம் பெரிதாக எடுபடவில்லை.

ஹரியின் பரபர திரைக்கதைக்கு பக்க பலமாய் நிற்கிறது கோபிநாத்தின் ஒளிப்பதிவு. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்தின் ஓட்டத்துக்கு பெரிதும் கைகொடுக்கிறது.

பெற்ற மகளாகவே இருந்தாலும், கொல்லும் அளவுக்கு ஒருவனை சாதி வெறி எப்படி உசுப்பேற்றுகிறது என்பதை மிக அழுத்தமாகவே பதிவு செய்தமைக்காகவே ஹரியைப் பாராட்டியாக வேண்டும்.

மதிப்பீடு: 3.5 / 5.00

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *