நடிகர்கள்: ஆர் மாதவன், சிம்ரன்
ஒளிப்பதிவு: சிரிஷா ராய்
இசை (பாடல்கள்): நேட் கார்னல், பில்லி டாவ்சன்
இசை (பின்னணி): சாம் சிஎஸ்
தயாரிப்பு: ஆர் மாதவன், சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன்
எழுத்து, இயக்கம்: ஆர் மாதவன்
இந்திய விண்வெளித் துறை இஸ்ரோ (ISRO) இன்று சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்து வருகிறது. நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றால் அது ஒரு நாளில் அல்லது ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை அல்ல… பல திறமையான விஞ்ஞானிகளின் அசாதாரண உழைப்பால் வந்த பலன். அத்தகைய விஞ்ஞானிகளில் தனித்த ஒரு இடம்பெற்றவர் நம்பி நாராயணன். விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டுகளில் பொருத்தும் க்ரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பம் இந்தியாவுக்குக் கிடைக்க எண்பதுகளிலேயே பல அசாதாரண வேலைகளைப் பார்த்த சாதனை தமிழர். அதை சாத்தியப்படுத்தியும் காட்டியவர். ஆனால் அவரைத்தான் உளவுத்துறையும் கேரள போலீசும் ‘பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை விற்ற தேசத்துரோகி’ என முத்திரைக் குத்தி, சிறையில் அடைத்து மூன்றாம் தர சித்திரவதையைச் செய்து துன்புறுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஏன் அவர் மீது சுமத்தப்பட்டன, இவற்றின் பின்னணியில் உள்ள சக்திகள் எவை என்பதெல்லாம் இன்றும்கூட வெளிவராத மர்மமாகவே உள்ளது. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை நிரூபித்தார் நம்பி. 1998-ல் அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது.
தான் பட்ட அவமானங்கள், துன்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ 1.3 கோடியை கேரள அரசிடமிருந்து பெற்றார் நம்பி. அவருக்கு இந்திய அரசு பின்னர் பத்மபூஷன் விருதினையும் அளித்து கௌரவப்படுத்தியது. ஆனால் தன்னை இத்தனை துயரங்களுக்கும் உள்ளாக்கியவர்கள் இன்னமும் சட்டத்தின் பிடியில் சிக்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்பி நாராயணனின் உண்மைக் கதைதான் ராக்கெட்ரி: நம்பி விளைவு.

நம்பி நாராயணன் பாத்திரத்தில் நடித்தது மட்டுமல்ல, மிகவும் சவாலான, கொஞ்சம் கவனம் பிசகினாலும் மிகவும் களைப்பு தரக்கூடிய ஒரு கதையை நேர்த்தியான திரைக்கதை மற்றும் உரையாடல் எழுதி இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் மாதவன்.
‘ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனாகவே மாறி வாழ்ந்திருக்கிறார்’ என்ற வாக்கியம் இந்தப் படத்தைப் பொறுத்தவரை மாதவனை மிகைப்படுத்திச் சொல்வதாகாது. ராக்கெட் அறிவியல் கற்கும் துடிப்பான மாணவன், நாசாவின் பல கோடி சம்பளத்தைத் துறந்து, நாட்டுக்காக பல சவால்களைச் சந்தித்து சாதனைகள் படைதக்கும் இளம் விஞ்ஞானி, பொய்யான தேசத் துரோக வழக்கில் சிக்கி, போலீசின் கொடுமைகளைச் சகித்து உண்மையை நிலைநிறுத்தப் போராடும் நடுத்தர வயது நம்பி, வழக்குகளில் வெற்றிப் பெற்ற பின், தனக்காகவே உடைந்து உருகி மனநலம் குன்றிய மனைவியைக் கட்டிக் கொண்டு, ‘இனி உனக்காகவே வாழப்போகிறேன்’ என உருகும் முதியவர்… பிய்த்து உதறியிருக்கிறார் மாதவன்.
ஒரு காட்சி…
சிறையிலிருந்து வீடு திரும்பி மனநலம், உடல் நலம் குன்றிய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பும்போது மழை பிடித்துக் கொள்ள, ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறுகிறார்கள். அடுத்த சில நொடிகளில் ஆட்டோ குலுங்கி, அந்த வயதான இருவரையும் வெளியில் துப்புகிறது. கட்டிய வேட்டி அவிழ்ந்து விழ, மருத்துவ காகிதங்கள் மழையில் சிதற, நனையும் மனைவியைக் காக்க முடியாமல், வழிப்பட்ட வாகனங்களை நிறுத்த தட்டுத் தடுமாறி போராடும் அந்த ஒரு காட்சி போதும்… மாதவனின் நடிப்பு, இயக்கம், திரைக்கதையின் அழுத்தம், நேர்த்தியைச் சொல்ல.
சிம்ரன் சில காட்சிகளில் வந்தாலும் மனதைத் தொடுகிறார்.
நடிகராகவே வந்து நம்பி நாராயணனை நேர்காணும் செய்தியாளராக வருகிறார் சூர்யா. நம்பியின் வாழ்க்கைத் துன்பங்களைக் கேட்டுக் கலங்கி அவரிடம் நாட்டு மக்கள் சார்பில் மன்னிப்பு கோரும் காட்சியில் நம் கண்களையும் நனைய வைக்கிறார்.
எண்பதுகளின் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவை திரையில் கொண்டுவர நிறையவே முயற்சி எடுத்திருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். ராக்கெட் அறிவியல் தொடர்பான காட்சிகளில் கலை மற்றும் அரங்க அமைப்பு வல்லுநர்களின் அபார உழைப்பு தெரிகிறது. கால மாற்றங்களை படிப்படியாக, எந்த மிகைப்படுத்தல், செயற்கைத்தனமிலமலாமல் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை உறுத்தலின்றி காட்சிகளோடு நம்மை ஒன்ற உதவியிருக்கிறது. ஆனால் நேட் கார்னல், பில்லி டாவ்சன் இசையில் இரு பாடல்கள். பெரிதாக ஈர்க்கவில்லை.

படத்தின் உரையாடலில் மாதவனுக்குள்ளிருக்கும் எழுத்தாளர் கம்பீரமாக முன்னிற்கிறார்.
முதல் பாதியில் இடைவேளைக்கு முந்தைய ஒரு 20 நிமிடக் காட்சிகளில் சற்றே ஆவணப்பட தொணி தூக்கலாக இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அதேபோல இறுதிக் காட்சியில் மோடியின் முழக்கம் ஒரு மலிவான விளம்பரம் போன்ற உணர்வைத் தந்ததையும்!
எத்தனையோ நிஜ வாழ்க்கைக் கதைகளை திரையில் பார்த்திருக்கிறோம். அவற்றில் எப்போதும் சிகரத்தில் நிற்பது மகாத்மா காந்தியின் வரலாறு. அதன் பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது, அண்ணல் அம்பேத்கர், 83 உலகக் கோப்பையின் வரலாறுகள். அந்த வரிசையில் இடம்பெறத் தகுதியான படம் இந்த ராக்கெட்ரி!
சே சங்கர்
மதிப்பீடு: 4.0/5.00