சென்னை: சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிபில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி நாளன்று உலகெங்கும் 2300க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படம் வெளியான நாளிலிருந்து அதிகபட்ச எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது.

ஆனால் அண்ணன் – தங்கை பாசம், குடும்ப உறவுகளின் மேன்மையைப் பேசிய இந்தப் படத்தை முதல்நாளிலிருந்தே மக்கள் குடும்பம் குடும்பமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். விமர்சனங்கள் ஒரு பொருட்டே அல்ல என்கிற அளவுக்கு பெண்கள் இந்தப் படத்துக்கு திரண்டு வந்தனர். தமிழகத்தில் மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளிலும் அண்ணாத்த படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் பெரும் சாதனையைப் படைத்தது. வெளியான இரண்டாவது நாளே ரூ 100 கோடி வசூலைப் பெற்ற அண்ணாத்த, ஒரே வாரத்தில் ரூ 200 கோடியைக் குவித்தது.

படம் வெளியாகி 11 நாள்களான நிலையில், அண்ணாத்த படம் உலக அளவில் ரூ 250 கோடி வசூலைத் தொடவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ரூ 120 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளது.

இத்தனை எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்த பிறகும், ஒரு படம் இவ்வளவு பெரிய வசூலைக் குவிக்கிறது என்றால் அது ரஜினிகாந்த் என்ற மகா கலைஞன் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் மட்டுமே என்கிறார்கள் திரையுலகினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *