க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

2

நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: பெ விருமாண்டி

படத்தின் சிறப்பு ஆரம்பித்த சில நிமிடத்திலேயே வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கதாநாயகன் இறந்துவிட்டதாய் நாயகிக்கு செய்தி வருகிறது. பிறகு நாயகன் நாயகி காதல் கதையின் ஃப்ளாஷ்பேக்குகள் வருவதால் காதல் காட்சிகளின் பலம் இன்னும் நமக்குக் கூடித் தெரிகிறது.. அதன் பிறகு அந்த இறந்த கணவனின் உடலைத் திரும்ப வாங்குவதில் ஆரம்பிக்கிறது சிக்கல்.

அதன் பிறகு இறந்தவர் குடும்பத்தில் படிப்பறிவு உள்ள ஒரு மனைவி மற்றும் ஒரு படிக்கும் சகோதரி இருந்தாலும் கூட ஒரு எளிய குடும்பம் அதிகாரிகளால் எப்படி அலைக்கழிக்கப் படுகிறது என்பதைச் சொல்கிறது படம். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே தனியாய்த் தாங்கிப் பிடித்திருக்கிறார் படத்தை. நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இதைப் போன்ற ஒரு படத்தில் நடித்ததற்கே விஜய்சேதுபதியைக் கண்டிப்பாய் பாராட்டலாம். ஆனால் படத்தில் அவரை ரசிக்கவும் காட்சிகள் இருக்கிறது. படத்தில் எல்லாருக்குமே சிறப்பாக உறுத்தாத அளவு நடித்திருக்கிறார்கள்.

அரசாங்க நிர்வாகம் எளியவர்களுக்கானது இல்லை என்பதை படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையில் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும், ”ஒரு பெண் நினைத்தால்..” என்று சொல்வதற்காகவோ என்னவோ அவர் பிரதமர் வரை போவது எல்லாம் கொஞ்சம் நம்பகத்தன்மையைக் குறைத்து விடுகிறது என்பதுதான் உண்மை. அதே போல விஜய் சேதுபதிக்கு நியாயம் செய்யவும் வைத்திருக்கும் சில ஃப்ளாஷ்பேக் போராட்டக் காட்சிகள் ஹீரோயிசத்துக்கும், நீளத்தைக் கூட்டவும் மட்டுமே உதவியிருக்கிறது. பிற்பாடு மனைவியின் போராட்டங்களும் வேதனைகளும் அவ்வளவு அழுத்தமாய் இல்லாமல் நீள்கையிலும், கடைசிக் காட்சிகள் சட்டென்று சுருக்கமாய் இல்லாமல் சடங்குகளை காட்சிப்படுத்தி நீட்டுவதும் இரக்கத்தை வரவழைப்பதற்கு முன், படத்தின் முடிவை பார்ப்பவன் முன்கூட்டியே யூகிக்க அவகாசம் கொடுத்துவிடுவதால் க்ளைமாக்ஸ் கொடுக்க வேண்டிய பாரத்தை முற்றிலும் குலைத்து விட்டது என்றே நினைக்கிறேன்.

பாடல்கள் படத்திற்கு பெரிதாக உதவவில்லை என்றாலும் வசனம் படத்தின் பலம். சிற்சில வசனங்கள் நச்சென்று நேரே நெஞ்சில் தைக்கிறது.

இன்னொரு மாநிலத்தில் சென்று வேலை செய்வதே சிக்கல் மிகுந்ததாய் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்னொரு நாட்டில் சென்று வேலை செய்வதும், அங்கே அவன் இறந்தால் அந்தக் குடும்பம் என்ன ஆகும் என்று வெளிநாட்டில் வேலை செய்யும் என்னை உண்மையில் இறப்பை விட அது நம் குடும்பத்திற்குக் கொடுக்கப் போகும் தொல்லைகளை நினைத்து கிலி கொள்ள வைத்தது என்றே சொல்லலாம்.

கணவன் வெளிநாட்டில் இறந்தால் மனைவிக்கு என்னவெல்லாம் நிகழும் என்று இந்தப் படத்திற்கு முன்பே நான் உணர்ந்தது பெருமழக்காலம் என்ற மலையாளப் படத்தில்.

ரகுராம ஐயர் மற்றும் அக்பர் இருவரும் சவூதியில் வேலைசெய்யும் மலையாளிகள். தங்கியிருக்கும் இடத்தில் நடந்த ஒரு கைகலப்பில் அக்பர் ரகுராமைத் தள்ள அவர் விழுந்து இறந்துவிடுகிறார். ஷரியா சட்டப்படி சவூதி அக்பருக்கு மரண தண்டனை வழங்கிவிடுகிறது.

ஆனால், இதிலும் கதை இவர்களை பற்றியது அல்ல… அவர்கள் இருவருடைய மனைவிகள் பற்றியதுதான். இறந்துபோன ரகுராமின் மனைவி கங்கா மன்னிப்புக் கொடுத்தால் அக்பரின் மரணதண்டனை ரத்து செய்யப்படும் என்ற சவூதியின் சட்டம் ரசியாவிற்கு தெரியவர, அவர் தனது கணவனின் உயிரைக் காப்பாற்ற கங்காவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் எப்படிப் போராடுகிறார் என்பது தான் படம்.

படம் முழுக்க இரண்டு குடும்பங்கள் நிலைகுலைவது, ஒரு பெண் விதவையாக மாறுகையில், இன்னொருத்தி பழி மற்றும் வெறுப்பில் கிடைக்கும் அவமானத்தில் துடிப்பது என்று நகரும் இந்தப்படம் நம் உணர்வுகளை நிச்சயம் அசைத்துப் பார்க்கும். அந்த இரு பெண்களுக்கும் எப்படி உறவுகளே முள்ளாய் மாறுகிறது என்பது நிச்சயம் நம் மனதில் நீண்ட நாட்கள் நின்று கேளிவிகளை எழுப்பும். கோழிக்கோட்டில் வாழும் மலையாள முஸ்லிம் குடும்பத்திற்கும், பாலக்காட்டில் தமிழ்ப் பிராமணக் குடும்பத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்… கணவனை இழந்த வேதனை ஒருத்திக்கு, கணவனைக் காக்கப் போராட்டம் இன்னொருத்திக்கு எனச் சுழலும் கதையில், கடைசியில் கணவன் இல்லையென்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இந்தச சமூகம் எத்தனை வலியைக் கொடுக்கும் என்று உணரும் கணவனை இழந்தவள் கொலை செய்தவனின் மனைவிக்காக தன் கணவனைக் கொன்றவனுக்கு மன்னிப்பு வழங்குவாள்.

அன்பும் மழைதான். கருணையும் மழைதான். ஆனால், மழை பெருமழையாய் மாறுகையில் அதுவும் வெள்ளமாய்ப் பெருகி வேதனையைத்தான் தரும் என்பது நமக்குத் தெரியுமே. கணவனைக் கொன்றவனை தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்காக மன்னிக்கும் அந்தப் பாலக்காட்டுப் பெண்மணியின் கருணைப் பெருமழை அவளுக்கு என்ன சேதம் விளைவித்தது என்பதைக் காட்டும் படத்தின் இறுதிக் காட்சி இந்த வாழ்க்கையில் மகனை இழந்த பெற்றோரின் பார்வையிலிருந்து நமது அன்பின் வன்முறையையும் காட்டிச் செல்லும்.

மனைவிகள் எப்போதும் அன்பின் பெருமழைகள் தான்.!