நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், லட்சுமி மேனன், மகிமா, வடிவேலு
ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர்
இசை: மரகதமணி
தயாரிப்பு: லைகா புரொடக்சன்ஸ்
இயக்கம்: பி வாசு
18 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரலாறு படைத்த, இன்றுவரை மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக அதே தலைப்பில் வெளியாகி இருக்கிறது இந்தப் படம்.
படம் பார்த்த பிறகு, படத்தின் இயக்குநர், நாயகன் உள்ளிட்ட அத்தனைப் பேருக்கும் நாம் சொல்ல விரும்புவது, தயவு செய்து ரஜினி படங்களை மறு ஆக்கம் செய்வது அல்லது தொடர்ச்சியை உருவாக்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்!
கதை, காட்சியமைப்புகள், அரங்க அமைப்புகள், பாத்திரங்கள் போன்றவற்றில் ரஜினியின் சந்திரமுகிக்கும் அதன் இரண்டாம் பாகம் எனச் சொல்லப்படும் இந்தப் படத்துக்கும் குறைந்தது ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் எனப் போட்டி வைத்துவிட்டு, மற்ற விடயங்களைப் பார்க்கலாம்!
ராகவா லாரன்ஸின் தோற்றம், தலைமுடி, உடல் மொழி எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ற உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ரஜினி மாதிரியே அந்த வேடத்தைச் செய்வதாக நினைத்து பார்வையாளர்களைச் சோதிக்கிறார். இது ரஜினிக்கும் மரியாதை செய்ததாக இல்லை. ராகவா மீதிருக்கும் நம்பிக்கைக்கும் சிறப்பு சேர்ப்பதாக இல்லை.
சந்திரமுகி படத்தின் சிறப்பே அந்த வேட்டையன் பாத்திரம். அந்தப் பாத்திரத்தை இழிவுபடுத்துவதுபோல இதில் வாசு காட்சியமைத்திருப்பது, இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டதன் எதிரொலியோ!
பழைய பஞ்ச்தான்… ஆனால் இந்தப் படத்துக்கு பொருந்துகிறது… அது, வடிவேலு இருக்கிறார்; நகைச்சுவைதான் இல்லை.
சந்திரமுகியாக வரும் கங்கனா ரணவத்தை சகிக்க முடியவில்லை என்பதே உண்மை. நடனம், நடை. உடலமைப்பு என எதிலும் சந்திரமுகி ஜோதிகாவில் 100-ல் ஒரு பங்குகூட கங்கனா இல்லை என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களைத் திருப்திப்படுத்தவில்லை. மரகதமணியின் இசையில் நி்றைய தெலுங்குப் பாடல்கள் கேட்பதைப் போன்ற உணர்வு. சந்திரமுகியின் ரா ரா.. வை வேறு அப்படியே உருவிப் போட்டிருக்கிறார். எதுவுமோ கேட்கிற மாதிரி இல்லை.
இடைவேளைக்கு முன்பு லட்சுமி மேனன் சக்கர நாற்காலியோடு பறக்கும் அந்த ஒரு காட்சி சொல்லிக் கொல்கிற மாதிரி ஒரு திருப்பம்.
இந்தப் படத்துக்கு சந்திரமுகி என்ற தலைப்பு, அந்த வடிவமைப்பு போன்றவற்றை முற்றாகத் தவிர்த்துவிட்டு வேறு தலைப்பை வைத்திருந்தால் கூட சற்று ரசித்திருக்க முடியுமோ என்னவோ… சந்திரமுகி 2 எனற தலைப்பும் அந்த கதைத் தொடர்ச்சியுமே நம்மை ஒவ்வொரு காட்சி, பாத்திரப்படைப்பிலும் ரஜினியுடனும் அவரது திரை அற்புதத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. ரஜினி திரையில் செய்யும் அற்புதங்களை மறுபடியும் நிகழ்த்தும் திறன் உண்மையில் யாருக்குமே இல்லை என்ற உண்மை புரிந்தால் சந்திரமுகி 2 போன்ற படங்களுக்கு அவசியமே இருக்காது!
மதிப்பீடு: 2.0/5.0
– எஸ்எஸ்