என்ஜாய் பட விமர்சனம்

2

 

நடிகர்கள்: மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஸ்குமார், நிரஞ்சனா, ஜீ,வி அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா

ஒளிப்பதிவு: கேஎன் அக்பர்

இசை – கேஎம் ரயான்

பின்னணி இசை- சபேஷ்- முரளி.

தயாரிப்பு: எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன்

எடிட்டர்: மணி குமரன்.

எழுத்து – இயக்கம்: பெருமாள் காசி

ஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள். அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் நட்பாகிறார்கள். ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின்.

காதலி இருந்தாலும், சின்னச்சின்ன குறும்புத்தனங்களுக்குக் கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. மென்பொருள் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் விக்னேஷோ சரியான சபல ஆசாமி. திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று உல்லாசமாக அனுபவிக்க நண்பர்கள் மூவரும் (இன்ப) சுற்றுலா கிளம்புகிறார்கள். .

அதேபோல சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவைக்காக வார இறுதி விருந்துகளில் கலந்து கொள்கிறார். இதனைப் பார்க்கும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழத் தயாராகின்றனர் அப்படி அவர்களுக்கான முதல் விருந்தை கொடைக்கானலில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.

எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும், விருந்தில் முதன்முறையாக உல்லாசம் அனுபவிக்க வந்த மூன்று தோழிகளும் ஒரு இக்கட்டான சூழலில் ஒன்றாக சந்தித்து ஒரே அறையில் தங்கும் சூழலும் உருவாகிறது. ஏதோ ஒரு அசட்டுத் துணிவில் கிளம்பி வந்துவிட்ட தோழிகளுக்கு விருந்தில் எதிர்பாராத பிரச்சனை ஏற்படுகிறது. அவர்களுக்கு உதவப்போய் இந்த மூன்று இளைஞர்களும் சிக்கலில் சிக்குகிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா ? இல்லை இழப்பைச் சந்தித்தார்களா ? இதில் அவர்களுக்கு கிடைத்த பாடம் என்ன ? படம் நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பது மீதிக்கதை.

இன்றைய பல இளைஞர்களின் மனநிலை, அது ஆணாக இருக்கட்டும் இல்லை பெண்ணாக இருக்கட்டும்.. திருமணத்திற்கு முன்பே தறிகெட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதற்கேற்றபடி மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பர வாழ்க்கை, நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்களை அந்த மாயைக்குள் தூண்டில் போட்டு இழுக்கிறது. இந்த விஷயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைவருமே இன்றைய இளைஞர்களின் தாகம், மோகம், வேகம், அதனால் ஏற்படும் குழப்பம் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

காதலியிடம் இருந்து ஒரு சிறிய மனமகிழ்வு கிடைக்காதா என சதா ஏங்கியபடியே தனது ஐஏஎஸ் படிப்பில் தடுமாறும் மதன்குமார், பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் டேட்டிங் வர மாட்டாளா என நினைக்கும் விக்னேஷ், திருமணத்திற்கு முன்பே அந்தரங்க பிரச்சனையில் சிக்கும் ஹரிஷ்குமார் என மூன்று கதாநாயகர்களுக்குமே படத்தில் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் டான்ஸர் விக்னேஷ் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளார். அவருக்கு அது கைவந்துள்ளது. மதன்குமார் சற்று தீவிர முகம் காட்டினாலும் காதலில் விழும் இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு பதின்பருவ பையன்களே போல இருந்தாலும் இந்த மூவரும் அதிரடி காட்சிகளிலும் அசத்தியுள்ளனர்.

அதேபோல கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வந்து, அந்த கலாச்சாரத்தை பதட்டத்துடன் எதிர்கொண்டு, அதை எப்படி அணுகுவது என ஒரு தெளிவில்லாமல் குழம்பும் இளம்பெண்களின் பிரதிபலிப்பாகவே ஜீவி அபர்ணா மற்றும் சாருமிசாவின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் சோடை போகவில்லை. நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை தாங்கிப் பிடித்துள்ளனர்.

இவர்களின் தோழியாக வரும் நிரஞ்சனாவின் பக்குவமான பேச்சும் அணுகுமுறையும், இடைவேளைக்கு பின்னான காதலும் இந்த மூவரில் இவருக்கு கொஞ்சம் கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தருகிறது.

கல்லூரியில் மூத்த மாணவர்கள் எல்லாம் இப்படி நல்ல தோழிகளாக இருந்துவிட மாட்டார்களா என ஏங்க வைக்கும் விதமாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஹாசின். சூழ்நிலை காரணமாக அவர் தனது வாழ்முறையை மாற்றிக்கொண்டாலும் தன்னைப்போலவே மாற முயற்சிக்கும் தனது தோழிகளை அவர் ஆரம்பத்தில் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்த முயற்சிப்பது அவர் பாத்திரம் மீதான மரியாதையை கூட்டுகிறது..

மதன்குமாரின் காதலியாக வரும் சாய் தன்யா கதாபாத்திரம் இன்றைய இளம் பெண்கள் காதலை எப்படி பாதுகாப்பாக அணுக வேண்டும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். இவர்கள் தவிர கடுமையான போலீஸ் அதிகாரியாக வந்து உச்சக் காட்சியில் திருப்பம் கொடுக்கும் காவல் ஆய்வாளர் பில்லி முரளி, வார இறுதி விருந்து நடத்துகிறேன் என எதிர்மறை நாயகனாக வரும் காலாட்படை ஜெய், பெண்களை அரக்கத்தனமாக அணுகும் சைக்கோ வில்லன் யோகிராம் என இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களும் கவனம் பெறுகின்றன.

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவில் சென்னையை விட கொடைக்கானல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏதோ நாமே சுற்றுலா போய்வந்த உணர்வை தருகின்றது. அதேபோல கேஎம்.ரயானின் இசை. இடைவேளைக்குப்பின் வரும் இரண்டு பாடல்கள் மற்றும் சபேஷ்-முரளியின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. மணி குமரனின் படத்தொகுப்பும் அந்த விறுவிறுப்புக்கு பக்கபலமாக கை கொடுத்துள்ளது.

இளைஞர்களை மையப்படுத்தி, அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாக இந்த கதையை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பெருமாள் காசி. குறிப்பாக இன்றைய பல இளைஞர்களின் மனப்போக்கை ஒவ்வொரு கதாப்பாத்திரம் வாயிலாக நன்றாக வெளிப்படுத்தவும் செய்துள்ளார். அதேசமயம் கதைப்போக்கில் நகைச்சுவையாக இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். ஒருவேளை இளைஞர்கள் மட்டும் படம் பார்த்தால் போதும், அவர்கள் நிச்சயம் இதை ரசிப்பார்கள் என நினைத்து விட்டாரோ என்னமோ?

அதேபோல நண்பர்கள் மூவரும் இருக்கும் வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் அந்த பேரிளம் பெண் தொடர்பான காட்சிகள் கையில் முளைத்திருக்கும் ஆறாம் விரல் போல தேவையற்ற ஒன்றாகவே தெரிகிறது. இப்படி சில குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், பார்க்கலாம்!