சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் ’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ (Project C – Chapter 2). 2018 ஆம் ஆண்டு வெளியான ‘மங்கை மான்விழி அம்புகள்’ என்ற படத்தை இயக்கிய வினோ இரண்டாவதாக இயக்கியுள்ள படம் இது. இப்படத்தில் ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி, கோவை குருமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ரம்மி போன்ற விளையாட்டு போல் நகரும் இப்படத்தின் கதையில் இடம் பெறும் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒவ்வொருவரும் ஒரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதோடு, இவர்களிடம் இருக்கும் போட்டி குணம் படம் பார்ப்பவர்களை பரபரக்க வைக்கும் என்கிறார் இயக்குநர் வினோ.
டிசம்பர் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ‘புரொஜக்ட் சி’ வெளியானது. அதற்கு முன்பாக நடந்த சிறப்பு காட்சியைப் பார்த்த பத்திரிகையாளரகள் அனைவரும் படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.
“2022 ஆம் ஆண்டு இறுதியில் தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான படமாக ‘புரொஜக்ட் சி’ இருக்கும். நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான படமாக இருக்கும். படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவரும் கவனம் பெரும் விதத்தில் நடித்திருக்கிறார்கள். காமெடி நடிகர் சாம்ஸின் வேடம் வித்தியாசமாக இருப்பதோடு, அவருக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் காமெடியை தவிர்த்த வேடங்களில் சாம்ஸ் சிறப்பாக நடிப்பார் என்று நிரூபித்திருக்கிறார்,” என்பதே பலரின் கருத்தாகவும் இருந்தது.
மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’ தான் முதலில் வெளியாகி உள்ளது. பொதுவாக பல பாகங்களாக வெளியாகும் படங்கள் முதல் பாகம் வெளியான பிறகுதான் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும். ஆனால், இப்படக்குழு சற்று வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளரும், படத்தின் ஹீரோவுமான ஸ்ரீயிடம் கேட்ட போது, ”தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை, என்று சொல்லும் அளவுக்கு படத்தை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளோம். படம் போலவே படத்தின் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறோம். இரண்டாம் பாகத்தைப் பார்க்கும் போது, முதல் பாகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படுவதோடு, அதன் தொடர்ச்சி மிக எளிமையாக புரியும்படியும் இருக்கும்,” என்றார்.
இப்படத்திற்கு சிபு சுகுமாரன் இசையமைத்துள்ளார். இவர் சுமார் 12 மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் இதுதான் முதல் படம். சதிஷ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘அடங்க மறு’, ‘அண்ணாதுரை’ போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தினேஷ் காந்தி படத்தொகுப்பு செய்துள்ளார்.
திரையரங்குகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.