தமிழ்நாடு ஒருபோதும் எனக்கு கசப்பான நினைவுகளைத் தந்ததில்லை! – கிச்சா சுதீப்

2

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் ‘விக்ராந்த் ரோணா’. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சத்யம் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிச்சா சுதீப்பிடம் சுதீப், விக்ராந்த் ரோணா படத்தை அனைத்து இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.

கே.ஜி.எஃப் படங்களுக்கு பிறகு கன்னட சினிமாவிற்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளதே, அதை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கிச்சா சுதீப், “ஒரு ஊரில் ஒரு கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ஒருவர் சென்றுவிட்டுவந்து அந்தக் கோவிலில் வேண்டியதால் நினைத்தது கிடைத்தது என்று சொன்னால் உடனே அந்தக் கோவிலின் மீது மரியாதை கூடும். அந்தக் கோவில் நீண்ட காலமாக அங்குதான் இருக்கிறது. எனவே அந்தக் கோவிலின் மீது குற்றமில்லை. நீங்கள் அந்தக் கோவிலுக்குத் தாமதமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள், அவ்வளவுதான். அந்தக் கோவில் எப்போதுமே தன்னுடைய சிறப்பைக் கொண்டிருந்தது. நீங்கள் அதுபற்றி தாமதமாக கேள்விப்பட்டுள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டுமல்லவா, தற்போது கன்னட சினிமாவிற்கு கிடைத்துள்ள மரியாதையை அப்படித்தான் பார்க்கிறேன்” என்றார்.

இந்தி மொழி தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுடன் ட்விட்டரில் ஏற்பட்ட கருத்துமோதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அஜய் தேவ்கான், ”என்னுடைய ட்வீட்டை படிக்கும்போது நீங்கள் கெட்ட மூடில் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் அவருடன் சண்டை போட்டதுபோல உங்களுக்குத் தெரிந்துள்ளது. அஜய் தேவ்கன் என்னுடைய நண்பர்தான். என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் போன் செய்து கேட்டிருக்கலாம். ட்விட்டர் மாதிரியான பொதுவெளியில் கேட்டால் நானும் பொதுவெளியில்தான் பதில் சொல்ல வேண்டிவந்தது.

நான் தொடங்கி வைக்காத ஒரு விவாதத்தை எப்படி முடித்தேன் என்பதற்காக என்னைக் குற்றம் சொல்லாதீர்கள். நான் அனைவருக்கும் மதிப்பு கொடுக்கக்கூடியவன். அவருக்கு தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. அதில் தவறும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் சொன்ன பிறகுதான் என்னுடைய மொழியில் நான் ட்வீட் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டு அவருக்கு உணர்த்தினேன்,” என்றார்.

நான் ஈ, புலி படங்களுக்குப் பிறகு தமிழில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, “இங்கே நிறைய நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். நான்தான் நடிக்க வேண்டும் என்ற தேவை இருக்கும்போது வருகிறேன். இங்கேயே நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும், நிறைவாக, மகிழ்ச்சியான நினைவுகளோடு செல்கிறேன். ஒருமுறை கூட கசப்பான நினைவுகள் இல்லை. இங்கே வருகிறேன். நிறைவாக சாப்பிடுகிறேன். மீண்டும் புறப்பட்டு விடுகிறேன். அவ்வளவுதான். என்னைப் போன்ற நடிகர்கள் அப்படித்தான் இருக்க முடியும். அதுதான் நல்லதும்கூட,” என்றார்.