பட விமர்சனம்: பயணிகள் கவனிக்கவும்

2

நடிகர்கள்: விதார்த், லட்சுமி ப்ரியா, கருணாகரன்

ஒளிப்பதிவு: பாண்டி குமார்

இசை: ஷாம்நாத் நாக்

தயாரிப்பு: டி விஜய ராகவேந்திரா

இயக்கம்: எஸ்பி சக்திவேல்

 

நூலகர் விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளிகள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாதாரண நடுத்தர குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகின்றனர்.

மறுபுறம் துபாயில் இருந்து ஊருக்கு வரும் கருணாகரனுக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் பண்ண திட்டமிடுகின்றனர். விதார்த் மெட்ரோ ரயிலில் தூங்குவதை குடிபோதையில் தூங்குகிறார் என்று தவறுதலாக கருணாகரன் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது தீயாய் பரவிவிடுகிறது. இதனால் விதார்த் வாழ்க்கையில் என்ன ஆனது? கருணாகரனுக்கு கல்யாணம் நடைபெற்றதா என்பது தான் பயணிகள் கவனிக்கவும் படத்தின் கதை.

சமூக வலைத்தள பாவனையாளர்கள் தீப்பரவலுக்காக (வைரல்) செய்யும் சில வேலைகள் எப்படி ஒரு குடும்பத்தின் நிம்மதியையே சிதைக்கிறது என்பதைச் சொல்லும் படம்.

வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளி வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் விதார்த். உணர்ச்சிகளை தனது சைகைகளின் மூலமே அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விதார்த்தின் மனைவியாக வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் லட்சுமி ப்ரியாவும் நாயகனுக்கு சளைக்காமல் அசத்தியுள்ளார். வண்டியில் போவது தொடங்கி, சாப்பிடும் சாப்பாடு வரை அனைத்தையும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவு செய்து விருப்பக் குறிகளுக்காக ஏங்கும் இன்றைய சமூகத்தில் உள்ள பலரது முகத்தை ஒற்றை உருவமாக கருணாகரன் வருகிறார். கிட்டத்தட்ட இணை நாயகன். நடிப்பில் எதார்த்தம்.

கருணாகரனின் நண்பராக வரும் சத்யன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும் ரசிக்கும் படியாக உள்ளது.

மாசூம் சங்கர், மூணார் ரமேஷ், பிரேம், வீட்டு உரிமையாளராக வரும் கவிதாலாயா கிருஷணன், விதார்த் நண்பராக வரும் ராமச்சந்திரன் என அத்தனைப் பாத்திரங்களும் உறுத்தாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு பலம்.

மிகவும் பொறுமையாகவே நகரும் திரைக்கதை நம் பொறுமையை சோதித்தாலும் படம் சொல்ல வரும் முக்கியம் என்பதால் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது. பயணிகள் கவனிக்கவும் படம் தனி கவனத்தைப் பெறுகிறது.

3.0/5.0 

அனிதா எஸ்