நடிப்பு: தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி

ஒளிப்பதிவு: விவேக் ஆனந்த் சந்தோஷம்

இசை: ஜிவி பிரகாஷ்

தயாரிப்பு: சத்யஜோதி தியாகராஜன்

இயக்கம்: கார்த்திக் நரேன்

துருவங்கள் பதினாறு படம் வெளியானபோது, அதன் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனை ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து அதே கார்த்திக் நரேனின் மாஃபியா படம் வந்தபோது, சினிமா பற்றிய அவரது புரிதலை கேள்விக்குள்ளாக்கினார்கள். இப்போது மாறன் பார்த்தபிறகு, ‘தம்பி… போய் இன்னும் கொஞ்சம் சினிமா கத்துக்கிட்டு வாங்க’ என்று கூற ஆரம்பித்துள்ளனர் திரை விமர்சகர்கள். காரணம்… மாறன் படத்துக்கு கார்த்திக் நரேன் அமைத்துள்ள மிகப் பலவீனமான திரைக்கதை!

படத்தின் கதை மிகப் பழமையானது. இந்தப் படத்தின் கதை என்றல்ல… எல்லாக் கதைகளும் பழமையானவைதான். எப்போதோ எங்கோ எடுத்தாளப்பட்டவைதான். அவற்றை மாறுபடுத்திக் காட்டுபவை திரைக்கதைகள்தான். அதில் சுத்தமாகக் கோட்டை விட்டுள்ளார் கார்த்திக் நரேன்.

நேர்மையான ஊடகவியலாளர் தனுஷ். அவருக்கு ஒரே தங்கை. சிறுவயதில், தங்கை பிறக்கும்போதே தந்தை கொல்லப்படுகிறார், தாய் பிரசவ மரணத்தைத் தழுவுகிறார். தங்கைக்கு எல்லாமாக இருந்து வளர்க்கிறார் தனுஷ். பின்னாளில் ஊடகவியலாளராகி அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறார் தனுஷ். ஒரு நாள் அவரது தங்கை உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார். அதற்குக் காரணம் தன்னால் அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் அரசியல்வாதியான சமுத்திரக்கனிதான் என நம்பும் தனுஷ், தானே களத்தில் இறங்கி, தங்கையின் கொலையைத் துப்பறிகிறார். உண்மையான குற்றவாளியை அவர் கண்டறிந்தாரா என்பதே மீதி.

ஒரு புலனாய்வுக் களம்… அதில் தங்கைப் பாசம்… ஆனால் காட்சியமைப்பில் விறுவிறுப்போ சுவாரஸ்யமோ இல்லாததால், சோர்வடைய வைக்கிறது.

தனுஷ் கதையின் நாயகனாக வந்துபோகிறார். இப்படி ஒரு கதை, பாத்திரத்தை அவர் எப்படி ஒப்புக் கொண்டார் என்பதுதான் படம் பார்த்த பலரின் கேள்வியும். தனுஷின் சகோதரியாக வரும் ஸ்மிருதி வெங்கட் பாத்திரம் ஓரளவு மனதில் ஒட்டுகிறது.

நாயகி மாளவிகா மோகனனுக்கு இது இன்னுமொரு படம். பல படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட அரசியல்வாதி வில்லனாக சமுத்திரக்கனி, ராம்கி, நரேன், போஸ் வெங்கட் என பலரும் இருக்கிறார்கள்.

நாயகன், நாயகிக்கே வேலையில்லாத ஒரு படத்தில் இசை, ஒளிப்பதிவு என மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் மட்டும் எப்படி சிறப்பாக இருக்கும்? திரையுலகில் ‘செட் ப்ராபர்டி’ என்ற ஒரு வார்த்தை அடிக்கடி உச்சரிப்பதைக் கேட்டிருக்கலாம். அதாவது ஒவ்வொரு காட்சிக்கும் வழக்கமாக சில பொருள்கள் சம்பிரதாயத்துக்கு இடம்பெறும் அல்லவா… அதுதான். அப்படி செட் ப்ராபர்டி போலத்தான் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஓடிடி ரிலீஸ் என்றாலே, ‘கன்டென்டுக்காக சும்மா சுருட்டிக் கொடுத்திருப்பாங்க’ என்று சொல்லும் நிலையை ஏற்படுத்தாமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது நம்ம கோலிவுட் படைப்பாளி்கள்!

Rating: 1.5/5.0

– அனிதா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *