ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் கலையரசன், ஆரவ், நாயகி நிதி அகர்வால், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,
பாடலாசிரியர் கார்கி, ஒளிப்பதிவாளர் தில் ராஜு, நடிகர் பாபி சிம்ஹா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்,
இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் அருண் விஜய், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் ராஜேஷ் எம்,
தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி, இயக்குநர் மிஷ்கின்… என ஏராளமான திரையுலகினர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி பேசுகையில், “படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விழாவிற்கு வந்த முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். கலையரசன், ஆரவ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். உதயநிதி சார் எப்பொழுதும் பணிவாக இருக்க கூடிய நபர், அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த 10 வருடத்தில் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று அதை நம்பும்படி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அப்படித்தான் இருக்கும், இந்த படம் உங்களை ஏமாற்றாது. எனக்கு இந்த வாய்ப்பளித்த உதயநிதி அவர்களுக்கு நன்றி,” என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கலகத் தலைவன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றிகள். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார். அவர் நிறைய நேரம் செலவழித்து, சிறப்பான காட்சிகளை தொகுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய உழைப்பும், அர்பணிப்பும் கொடுத்துள்ளோம். இயக்குநர் மகிழ் திருமேனி சிறப்பான படத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.
தனது பேச்சின் இடையே, தன்னை வைத்துப் படம் இயக்கிய மகிழ் திருமேனி, மாரி செல்வராஜ் மற்றும் மிஷ்கின் போன்றவர்களையும் கலாய்க்கத் தவறவில்லை உதயநிதி.
“கலகத் தலைவன் படம் தொடங்கி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் முடியவில்லை. ஆனால் எனக்கு படத்தின் கதையே மறந்துவிட்டது என்றார். மகிழ் திருமேனிதான் இப்படி மெதுவாக படத்தை எடுக்கிறார் என நினைத்திருந்தேன். ஆனால் மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் அதைவிட மோசம். ஒரே காட்சியை பல முறை எடுத்துக் கொண்டே இருக்கிறார். இன்னும் போய்க் கொண்டிருக்கிறது. மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் பாதிக் காட்சிகளில் நான் நடிக்கவே இல்லை. டூப் போட்டுத்தான் எடுத்தார்,” என்று சம்பந்தப்பட்ட இயக்குநர்களை மேடையில் வைத்துக் கொண்டே உதயநிதி சிரித்தபடி குத்திக் காட்டினார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.