ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் 25வது நாளாக கெத்து காட்டும் அண்ணாத்த!

1

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியானது அண்ணாத்த படம். எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், அந்தப் படம் வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.

இதனால் படம் வெளியாகி 20 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 150 கோடிகளையும், உலகெங்கும் கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளையும் அண்ணாத்த வசூலித்தது.

21 நாட்கள் கழித்து படம் நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய இணைய செயலிகளில் வெளியானது. இதன் மூலம் தியேட்டருக்குப் போக முடியாதவர்கள் அந்தப் படத்தை வீட்டிலேயே குடும்பத்துடன் பார்த்தனர். அதேபோல, நெட்பிளிக்ஸில் இதுவரை வெளியான படங்களிலேயே முதல் நாளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் அண்ணாத்த படைத்துள்ளது.

பொதுவாக ஒரு படம் ஓடிடி எனும் இணைய செயலிகளில் வெளியாகிவிட்டால், அந்தப் படம் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுவிடும்.

ஆனால் மாநாடு, ராஜ்யவம்சம், வனம் போன்ற புதிய படங்கள் வெளியான நிலையிலும் பல நகரங்களில் கணிசமான திரையரங்குகளில் அண்ணாத்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சில அரங்குகளில் அண்ணாத்த இப்போதும் 4 காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் பல திரைகளில் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்த காட்சிகளாக அல்லது 80 சதவீத பார்வையாளர்களுடன் அண்ணாத்த ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்டதால், 25-ம் நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் இன்று நடத்தி வருகின்றனர்.

 

https://twitter.com/1Vishwajitrao/status/1464832053162041344?s=20