நடிகர்கள்: விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்ரி
இசை: ரஞ்சித் உன்னி
தயாரிப்பு: லைட்ஸ் ஆன் மீடியா
இயக்கம்: தனபாலன் கோவிந்தராஜ்

ஒரு அரை மணி நேர குறும்படத்தை 2 மணி நேர பெரும்படமாக எடுத்திருக்கிறார்கள். உயிருக்குப் போராடும் ஒருவரைக் காப்பாற்ற அவருடன் காடு முழுக்க ஓடிக் கொண்டே இருக்கிறார் நாயகன். இதுதான் ஒருவரிக் கதை.

நிஷாந்த் ரூசோ ஒரு சின்ன குற்றவாளி. காட்டில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் வருகிறது. உடனே ரூசோவைக் கூட்டிக் கொண்டு நிகழ்விடத்துக்குச் செல்கிறார்கள். அங்கே விவேக் பிரசன்னா கொல்லப்பட்டுக் கிடக்கிறார். பக்கத்தில் யாராவது உதவிக்குக் கிடைப்பார்களா எனத் தேடிப் பார்க்கப் போகிறார் காவல் அதிகாரி. அப்படிப் போகும்போது, ரூசோவை விவேக் பிரசன்னாவுடன் பிணைத்து விலங்கிட்டுவிட்டுச் செல்கிறார். பிறகுதான் தெரிகிறது விவேக் பிரசன்னா சாகவில்லை என்பது. உடனே அவரை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் நிஷாந்த். சிலர் அவர்களைக் கொல்லத் துரத்துகிறார்கள். அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை.

ஒரு சின்ன முடிச்சுதான். அதை வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் ஓடிக் கொண்டே இருப்பதால் அலுப்புத் தட்டுவது உண்மைதான்.

விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ இருவருமே சொன்னதைச் செய்திருக்கிறார்கள். காயத்ரி எதிர்மறைப் பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இந்த மூவரையும் இன்னும் மெனக்கெட வைத்திருக்கலாம் இயக்குநர்.

காவல் அதிகாரிகளாக வரும் வினோத் சாகர், கோடங்கி வடிவேலுவின் நடிப்பில் செயற்கைத்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.

ஒரு த்ரில்லர் படம் என்றால், லாஜிக்குகள் பற்றி பார்ப்பவர்களை யோசிக்க விடாமல் பரபரவென திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் இல்லை என்பதுதான் படத்தின் பிரச்சினை.

பெரும்பாலும் காட்டுக்குள்ளேயே நடக்கிறது கதை. ஒளிப்பதிவாளர் அஸ்வின் உழைப்பு தெரிகிறது. ரெஞ்சித்தின் இசை பரவாயில்லை.

இன்னும் தீவிர உழைப்பும், நல்ல திரைக்கதையும் இருந்திருக்க வேண்டும்.

மதிப்பீடு: 2.0/5.0

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *