வட கொரியா… வெளிநாட்டுப் படம் – சீரியல் பார்த்தால் மரண தண்டனை!

1

பியாங்யாங்: அமெரிக்கா, தென் கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வேலையின் ஒரு பகுதியாக கடுமையான புதிய சட்டம் ஒன்றை வடகொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளது கின் ஜோங் உன் அரசு.

கிம் ஜோங் உன்னின் புதிய உத்தரவின்படி, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அத்தகைய படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.

வெளிநாட்டு மொழிவழக்கம், சிகையலங்காரம், உடைகள் போன்றவை ‘ஆபத்தான நஞ்சு’ என தனது உத்தரவில் கிம் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு முற்றாக இல்லை என்று அறிவித்துள்ள கிம்மின் அரசு, அந்நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது. அங்கிருந்து யாரும் வெளியேறவோ, வெளிநாட்டவர் யாரும் புதிதாக நுழைவதோ வட கொரியாவில் சாத்தியமற்ற நிலையை கிம் ஜோங் உன் உருவாக்கியுள்ளார்.