பாஜகவை ஆட்டம் காண வைத்த நிதீஷ் குமார்!

2

பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். ஆனால் பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அதிக இடங்களில் வென்றாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல் அமைச்சர் ஆனார்.

கூட்டணி கட்சிகள் என்றாலும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா இடையிலான உறவு ஆரம்பத்திலிருந்தே சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் குமாரை விமர்சித்து வந்தார்கள். நிதீஷ் குமாராலும் முழு சுதந்திரத்துடன் இயங்க முடியவில்லை. மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார். இதில் மத்திய அமைச்சரவையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜனதா முதலிலேயே மறுத்துவிட்டது. இதையடுத்து பா.ஜனதா தலைமையிலான அமைச்சரவையில் இனி சேரப்போவது இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது.

மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்வதாகவும், அதற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.சி.பி. சிங்கை பா.ஜனதா வளைக்க முயற்சிப்பதாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் சந்தேகித்தனர். இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.யாக இருந்த சி.பி. சிங்கின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால் அவருக்கு நிதிஷ்குமார் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் அவருக்கு கட்சி சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதனால் ஆர்.சி.பி.சிங் சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அழைத்த 4 கூட்டங்களில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பதவி ஏற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் உள்ளிட்ட 4 கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்தார்.

இதனால் அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி செல்வதாக கூறப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் பா.ஜனதா இடையே விரிசல் அதிகரித்து வந்த சூழ்நிலையில் இரு கட்சியினரும் பாட்னாவில் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஐக்கிய ஜனதாதளம் அரசை ஆதரிக்க தயார் என்று ஏற்கனவே லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளன. எனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி லல்லு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. எனவே நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறினால் அவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்கத் தயாராக இருந்தது.

இந்த நிலையில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், கவர்னரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய ஆட்சியை அமைக்கிறார் நிதீஷ்குமார்.

7 கட்சிகள்

ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.. இன்று மாலை 4 மணிக்கு இந்த புதிய கூட்டணி அரசு பதவியேற்கிறது. இந்த புதிய அமைச்சரவையில் ஆர்ஜேடி, ஜேடியூ கட்சிகளுக்கு தலா 14 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும் வழங்கப்படுகின்றன.. அதேபோல, காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

பாஜக அதிர்ச்சி

நிதீஷ் குமாரின் இந்த அரசியல் முடிவு பாஜகவை அதிர வைத்துள்ளது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக எதிர்ப்பை முன்னெடுக்க ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நிதீஷ்குமாரின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.