டெல்லி: நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) மாலை சரியாக 7.23 நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

‘நான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, கடவுளின் பெயரால்..’ என்று ஆரம்பித்து மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவுக்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் ‘பாரத் மாதா கி ஜி’ என்று பலத்த கோஷம் எழுப்பினர்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், ஹெச்டி குமாரசாமி, தர்மேந்திர பிரதான், ஜித்தன் ராம் மாஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ராம்மோகன் நாயுடு, பிரஹலாத் ஜோஷி, கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மொத்தம் 72 பேர் இன்று மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.

இந்த மோடி 3.0 மத்திய அமைச்சரவையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

முன்னதாக நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *