ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் சரவணன் பேசும்போது, “இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையைப் பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை.. காரணம் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைத்தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரைப் பார்த்ததுமே இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது. உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல இந்த படத்தின் ஒர்க்ஷாப்புக்கு வரும்போது பேண்ட் சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக்கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன். அதிலிருந்து இந்தக்கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில் கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது,” என்று கூறினார்.

படத்தின் நாயகன் தர்ஷன் பேசுகையில், “இயக்குநர் சரவணன் என்னிடம் கதை சொன்னபோது இந்த படத்தில் நான் இருக்கிறேனா என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. கொல்லிமலையில் பிறந்து வளர்ந்த இளைஞனாக இதில் நடித்துள்ளேன். கதாநாயகி மகிமா நம்பியார் சீனியர் என்கிற ஈகோ பார்க்காமல் என்னிடம் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதையெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொன்ன மகிமா, படப்பிடிப்பில் என்னை பலமுறை உற்சாகப்படுத்தி பாராட்டினார். இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் இன்பாவுடன் நல்ல ஒரு நட்பு உருவானது. எங்களை பார்த்தவர்கள் திரையில் தோன்றுவதைவிட வெளியில் அவ்வளவு பிணைப்புடன் இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்கள்,” என்றார்.

நாயகி மஹிமா நம்பியார் பேசும்போது, “இந்தப் படம் குறித்து இயக்குநர் என்னிடம் தொலைபேசியில் 20 நிமிடம் கதை சொன்னார். அப்போதே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதன்பிறகு நானே அவருக்கு போன்செய்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினேன். அவரும் பெரிய அளவில் ஆச்சரியம் காட்டாமல் அப்படியா என்று சொல்லி ஒப்புக்கொண்டார். அதை கேட்டதும் ஒருவேளை வேறு யாரிடமோ பேசுவதற்கு பதிலாக தவறிப்போய் என்னிடம் கதைசொல்லி விட்டாரோ என்று கூட குழம்பினேன். படப்பிடிப்புக்கு சென்றபோது அவரிடம் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய என்ன காரணம் என நேரிலேயே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிம்பிளாக, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சில பேரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் போன்செய்து பேசியபோது அதில் எனக்கு மதிப்பளித்து திரும்பவும் பதிலளித்தவர் நீங்கள் ஒருவர்தான்.. அதனால்தான் உங்களையே கதாநாயகியாக தேர்வு செய்து விட்டேன் என்றார்.

படத்தில் என்னைவிட தர்ஷன்-இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்பநிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்,” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் சக்திவேல், கலை இயக்குனர் இளையராஜா, இசையமைப்பாளர் சத்யா, படத் தொகுப்பாளர் பொன் கதிரேசன், படத்தின் தயாரிப்பாளர் சக்ரா, நடிகர் சிங்கம்புலி, நடிகர் அருள்தாஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *