கொல்கத்தா: 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், மேற்குவங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதற்கு முன்னர் நந்திகிராமில் உள்ள ஷிவ் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நந்திகிராமில் பிரசாரத்திற்காக இன்று தங்க முடிவெடுத்தார். இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய முயற்சி நடைபெற்று உள்ளது. மம்தா பானர்ஜியின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நந்திகிராமில் தான் இருந்தபோதுதான் இன்று தாக்கப்பட்டதாக மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் தனது காரில் ஏற முயன்றபோது நான்கு அல்லது ஐந்து மர்மநாபர்களால் தள்ளப்பட்டதாக கூறினார்.அவர் தனது காலை சுட்டிக்காட்டி, “இந்த கால் எப்படி வீக்கமடைந்துள்ளது என்று பாருங்கள்” என்றார். “இது ஒரு திட்டமிட்ட , நிச்சயமாக இது ஒரு சதி … என்னைச் சுற்றி எந்த போலீசாரும் இல்லை” என்று கூறினார்.
நந்திகிராமில் இன்று இரவு மம்தா தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கொலை முயற்சி காரணமாக கொல்கத்தாவுக்குப் புறப்பட்டார்.