கேஜிஎஃப் 2… இந்திய சினிமாவில் புதிய சாதனை!

1

ராக்கி பாய் என அழைக்கப்படும் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேஜிஎஃப் 2. இதன் முதல் பாகம் கேஜிஎஃப் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம், அதைவிட பல மடங்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

குறிப்பாக வட இந்தியாவில் நேரடி இந்திப் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கேஜிஎஃப் 2. வார், தக்ஸ் ஆப் இந்துஸ்தான் போன்ற படங்களின் வசூலையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ரூ 65 கோடி மொத்த வசூலை முதல் நாளில் குவித்துள்ளது கேஜிஎஃப் 2. பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் வசூலையும் வட இந்தியாவில் முந்திவிட்டது கேஜிஎஃப் 2.

கன்னடத்தில் எடுக்கப்பட்டு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படம்தான் இது. ஆனால் வெளியான அனைத்து மொழிகளிலும் ஒரு நேரடிப் படத்தைவிட
அதிக வரவேற்புடன் வசூலைப் பெற்றுள்ளது கேஜிஎஃப் 2.

வெளியான முதல்நாளான நேற்று கர்நாடகத்தில் 48 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம். கன்னட சினிமா வரலாறு காணாத வசூல் இது. கேரளாவில் முதல் முறையாக ரூ 8 கோடி வசூலைப் பெற்றுள்ள படம் என்ற சாதனையையும் கேஜிஎஃப் 2 படைத்துள்ளது. வட இந்தியாவில் மொத்தமாக ரூ 65 கோடிகளையும், ஆந்திரா – தெலங்கானாவில் 45 கோடிகளையும் கேஜிஎஃப் 2 வசூலித்துள்ளது.

தமிழகத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதால், 300க்கும் குறைவான அரங்குகளிலேயே கேஜிஎஃப் 2 வெளியானது. ஆனாலும் ரூ 12 கோடியை தமிழகத்தில் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ரூ 30 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்துள்ளது. மொத்தமாக அனைத்து மொழி மற்றும் உலக அளவில் ரூ 210 கோடியை முதல் நாளிலேயே குவித்துவிட்டது கேஜிஎஃப் 2.

ஒரு கன்னட டப்பிங் படம் உலக அளவில் இவ்வளவு பெரிய வசூலைப் பெற்றிருப்பது இந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதல்முறை. தமிழகத்தில் இரண்டாம் நாளான இன்றிலிருந்தே (ஏப்ரல் 15) கேஜிஎஃப்புக்கு அதிக அரங்குகளை ஒதுக்கி வருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். எனவே முதல் வார இறுதியில் இந்திய சினிமாவையே அதிர வைக்கும் வகையில் கேஜிஎஃப் 2 வசூல் விவரங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.