கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் கன்னட படம் மேக்ஸ்!

1

லைப்புலி தாணுவின் தமிழ், கன்னட திரைப்படம் MAX இன் டிரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் சென்னையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.l தாணு, நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குநர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர்.

திரைப்படத் துறையின் பல பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உடையகுமார், இயக்குநர்கள் மிஸ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கொட்டாரக்காரா, முன்னாள் தலைவர் காட்ராகட்ட பிரசாத், நடிகர் இளவரசு, நடன அமைப்பாளர் ஷோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு பேசும்போது, படக்குழுவின் கடின உழைப்பை பாராட்டி, MAX திரைப்படம் அதன் தனித்துவம் மிக்க கதை கூறும் முறையாலும், இசையாலும் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார். பாடல்களை உருவாக்கிய அஜனீஷ் பை லோக்நாத்தின் திறமையை அவர் பாராட்டினார்.

கிச்சா சுதீப், படத்தின் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்ததுடன், இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இவர் தனது உரையில், அறிமுக இயக்குநர் விஜய் கார்த்திகேயாவின் கதையை புகழ்ந்து, தயாரிப்பாளர் தாணு அவர்களின் பரந்த மனதை குறிப்பிட்டார் . காக்க காக்க படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது தாணு அவர்களிடம் நேர்முகமாக சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து, ஒரு பைசா கூட வாங்காமல் அவருக்கு உரிமை வழங்கியதை நினைவு கூர்ந்தார். மேலும், தாணு அவர்கள் கன்னடத் திரைப்படத்துறையிலும் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இயக்குநர் மிஸ்கின் பேசும் போது, தாணு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தனது திரைப்படமான Train-ல் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவருடைய கதை கூறும் கனவுகளை நிறைவேற்ற உதவியதற்கு நன்றியை வெளிப்படுத்தினார். அதேபோல், MAX படக்குழுவுக்கும் வெற்றிக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தேசிங் பெரியசாமி பேசுகையில், தாணு அவர்களின் மேற்பார்வையில் தாங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டு, அவருடன் மீண்டும் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கோட்டாரக்காரா பேசும் போது, விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களில் செயல்படும் அனைவரையும் திரைப்படங்களை நேர்மையாக ஆதரிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். சிறந்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றால், தயாரிப்பாளர்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடக ஆதரவு முக்கியம் என்றார்.

MAX திரைப்படம், டிசம்பர் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.