ஷிகர் தவான் சதம்… சென்னையை வீழ்த்தியது டெல்லி!

1

சார்ஜா: ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

தொடக்கத்திலேயே சாம் கர்ரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்துவந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

வாட்சன் 36 ரன்னில் வெளியேறினார். டு பிளசிஸ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 58 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் டோணி வெறும் 3 ரன்னில் அவுட்டானார்.

அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது. அம்பத்தி ராயுடு 45 ரன்னுடனும், அதிரடியாக ஆடிய ஜடேஜா 13 பந்தில் 4 சிக்சர் உள்பட 33 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்..

டெல்லி சார்பில் நார்ட்ஜீ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பிரித்வி ஷா முதல் ஓவரில் டக் அவுட்டானார். ரகானே 8 ரான்னில் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் பொறுப்புடன் ஆடினார். ஷ்ரேயஸ் – தவான் சேர்ந்து 68 ரன்கள் சேர்த்தனர். அய்யர் 23 ரன்னில் அவுட்டானார்.

தொடர்ந்து இறங்கிய ஸ்டோய்னிஸ் 24 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 4 ரன்னிலும் வெளியேறினர். அதிரடியாக ஆடிய தவான் சதமடித்தார்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஜடேஜா வீசினார். அக்டர் படேல் அபாரமாக அந்த ஓவரை ஆடினார். 5 பந்துகளிலேயே வெற்றிக்குத் தேவையான 17 ரன்களை விளாசி வெற்றியை ருசித்தனர் டெல்லி வீரர்கள்.