எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

1

;நடிகர்கள்: சூரியா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ், வினய், சரண்யா, இளவரசு, சூரி, ராமர், திவ்யா

ஒளிப்பதிவு:

இசை: டி இமான்

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

எழுத்து – இயக்கம்: பாண்டிராஜ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் அம்பலமாகி, குற்றவாளிகள் யார், அவர்களின் அரசியல் பின்னணி எல்லாம் தெரிந்தும் சட்டம் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இதுவும் கடந்துபோகும் என்ற காலாவதியான வசனத்தைச் சொல்லிக் கொண்டு அத்தனை பேருமே அமைதியாகக் கடந்து போகவே முயல்கிறார்கள்.

ஆனால் சூர்யாவும் பாண்டிராஜும் இந்த கொடுங் குற்றவாளிகளை என்ன செய்யலாம்… எப்படித் தண்டிக்கலாம் என யோசித்ததன் விளைவுதான் எதற்கும் துணிந்தவன்.

எனக்கு நானே நீதிபதி என்ற மனப்பான்மை கொண்ட, கிராமத்து அதிரடி குறும்புத்தனம் மிக்க இளம் வழக்குரைஞர் கண்ணபிரானாக சூர்யா. காதல், வீரம், நகைச்சுவை. ஆக்ரோஷம், அநீதி கண்டு பொங்கும் இயல்பு என அனைத்தையும் இம்மியும் இயல்பு மீறாமல் அருமையாகச் செய்திருக்கிறார் கதையின் நாயகனான சூர்யா. அண்ணன் நானிருக்கேன் என பாதிக்கப்பட்ட இளம்பெண்களை அவர் தேற்றும் காட்சிகள் இளக வைக்கின்றன.

பெண்களை கண்ணியமாகப் பார்ப்பவன், நடத்துபவனே உண்மையான ஆண்மகன் என்பதை ஒவ்வொரு காட்சி – வசனங்களில் ஆழப் பதிய வைக்கிறார்கள் சூர்யாவும் இயக்குநரும். அதுவே இந்தப் படத்தின் பெரும் வெற்றி எனலாம்.

நாயகியாக வரும் ப்ரியங்கா மோகனின், அழகு, துறுதுறுப்பு, குறும்பு மிக்க நடிப்பு மனதைக் கவர்கிறது. தன் நிர்வாண காணொலி வெளியானதை அறிந்து நிலைகுலைந்துபோவதும், கணவன் மற்றும் குடும்பத்தினர் தந்த ஆறுதலால் தேறி எழுந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நீதிமன்றம் செல்வதும் தன்னம்பிக்கை ஊட்டும் காட்சிகள். பிரமாதப்படுத்தியிருக்கிறார். தமிழில் மிகப் பெரிய எதிர்காலம் இந்த இளம் நாயகிக்கு காத்திருக்கிறது.

சத்யராஜ், சரண்யா, இளவரசு, தேவதர்ஷினி, சூரி, ராமர், புகழ், திவ்யா அனைவருமே பாராட்டும்படியான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

பாலியல் கொடூரங்களை அரங்கேற்றும் கொடியவனாக வரும் வினய், பார்வையாளர்களை வெறியேற்றுகிறார். ‘அடித்து கொல்லுங்க’ என அரங்கில் ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார் வினய்.

படத்தின் எதிர்மறை விஷயம் அதன் இரண்டாம்பாதி. இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம். ஆனால், நடந்த குற்றத்தின் தீவிரம் பார்வையாளர் நெஞ்சைத் தைக்க வேண்டும் என்பதே அந்தக் காட்சிகளின் நோக்கம் என்பதால், சற்றே பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இதைல்லாம் நடைமுறையில் சாத்தியமா… என்றெல்லாம் சிலர் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சாத்தியமாக வேண்டும். மக்கள் நினைத்தால், நமக்கென்ன என்று சும்மா இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கண்ணபிரான் தோன்றினால் இதுபோன்ற வக்கிர வன்முறைகள் பெண்களுக்கு எதிராக இல்லாமல் போகாவிட்டாலும், குறையவாவது செய்யுமே!

எஸ் சங்கர்
மதிப்பெண்: 3.5 / 5.0