முந்தைய இரண்டு படங்களுடன் (பரியேறும் பெருமாள், கர்ணன்) ஒப்பிடுகையில், படைப்பாக்க நேர்த்தியில் சிதறல்கள் நிறைய. எனினும், அரசியல் களத்தில், அதிகம் பேசப்படாத அல்லது குறைவாகப் பேசப்பட்ட அல்லது பேசுவது போல பேசப்படாமல் விடப்பட்ட ஒரு முக்கியப் புள்ளியை ‘மாமன்னன்’ உரக்கப் பேசுகிறது.
ஜனநாயக அரசியலில், எல்லோருக்குமான – கண்ணியமான பங்கேற்பின் நியாயத்தை, விரிந்த பரப்பில் வலுப்படுத்த தீவிரமாக உழைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
பகத் பாசில் எப்போதும் அருமையாக நடிக்க வல்லவர். வடிவேலுவுக்குள் புதைந்திருந்த இன்னொரு கலைஞனை வெளிக் கொணர்ந்திருப்பது சிறப்பு. திரை வாழ்க்கையில், ஒரு நடிகராகவும், இப்படியான பேசுபொருளை முன்நகர்த்தும் படத்தை தயாரித்ததற்காகவும் உதயநிதிக்குப் பெருமை சேர்க்கும் படம்.
வடிவேலு பாடிய ‘ராசா கண்ணு’ பாடல், படம் வெளிவரும் முன்பே பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். ரகுமானிடமிருந்து இப்படியொரு இசையை, குறிப்பாக பின்னணி இசையைப் பெற்றது, மாரி செல்வராஜ் என்ற படைப்பாளியின் திறமையை கூடுதலாக உணர்த்துகிறது. என்றாலும், படம் முடிந்த பிறகு, ஏ.ஆர்.ஆர். ‘ஏ நண்பா… ஏலே நண்பா…’ என்று துள்ளலுடன் பாடுகையில், இறுதியில் படம் ஏற்படுத்திய உணர்விழைகளால் சூழ்ந்திருந்த பார்வையாளர்கள், திடீரென்று குறுக்கே வரும் வாகனத்தைப் பார்த்து அதிரும் பாதசாரிகள் போல, கலைந்து போய் வெளியேறுகிறார்கள்.
படத்தின் தாக்கத்தை சுமந்து செல்ல பார்வையாளர்களை இடையூறின்றி அனுமதிக்க வேண்டும். இயக்குநருக்கு தெரியாததல்ல.
அதுபோல, குறியீட்டுக் காட்சிகளில் மாரி செல்வராஜ் இன்னும் கவனம் செலுத்துதல் நலம். திரை மொழியை குறியீட்டுக் காட்சிகள் பலப்படுத்த வேண்டும். மாறாக, பல இடங்களில் அக் காட்சிகள் படத்தின் கட்டுமானத்தை இடித்துவிட்டுச் செல்கின்றன.
இந்தப் படம் சார்ந்து சமூக ஊடகங்களில் நடக்கும் பல உரையாடல்கள் சாய்வு மற்றும் தேய்வு மனப்பான்மை கலந்தது. அது கடந்து – கவனத்திற்குரிய, முக்கியமான அரசியல் படம் இது.