மகாராஜா… இப்படியும் ஒரு பார்வை

 

டம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஒரு பக்கம் ஃபீல் குட் பிளாக்பஸ்டர் என டிக்ளேர் செய்துவிட்டார்கள். இன்னொருபக்கம் glorifying extra judicial murders என அதீத அறம் சார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் எனக்கு சிக்கலாக இருந்த இடங்களை பேசிவிடலாம் என நினைக்கிறேன்.

பாலியல் ரீதியான குற்றங்களை மையப்படுத்தி உலக அளவில் பல படங்கள் வந்து கொண்டிருக்கும் காலமிது. அதிலும் குட் டச் பேட் டச் கூட அறியாத குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி இன்னும் பல படங்கள் வர வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், மகாராஜா திரைப்படம் இதையொரு கமர்ஷியல் யுக்தியாக பயன்படுத்தியிருப்பதுதான் அருவருப்பின் உச்சமாக இருக்கிறது.

விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஒரு தடகள வீராங்கனைக்கு தந்தையின் முழு அரவணைப்பில் வளரும் ஒரு பெண்ணுக்கு அவளின் எதிர்காலம் சூன்யமாக்கப்படுகிறது. அதற்கான பழிவாங்கும் படலத்தை தந்தை தொடங்குகிறார் . படத்தின் க்ளைமாக்சுக்கு முந்தைய பகுதியை கத்தரித்துவிட்டாலும் மகாராஜாவில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அட அவ்வளவு ஏன் ‘லால் சலாம்’ விக்ராந்த் கையை இழப்பது போல இதில் காலை இழப்பதாகக்கூட காட்சிப்படுத்தி இருக்கலாம். சிறுமி பாலியல் அத்துமீறல் காட்சியைத் தாண்டி கதாசிரியருக்கு சிங்கம்புலி கதாபாத்திரம் இரண்டாம் முறையாக அந்த அறைக்குள் செல்வதை காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. காரணம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை ஒரு கமர்ஷியல் உத்தியாக பார்க்கத் திட்டமிட்டதின் அவலம்தான்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளை புறந்தள்ளி விடலாம். பொது சமூகம் எதிர்பார்ப்பது அரபு நாடுகளின் தீர்ப்பு மொழிதான். அதனால்தான் பொள்ளாச்சியில் பள்ளி வேனில் நிகழ்த்தப்பட்ட ஒரு குற்றத்திற்கு கொடுக்கப்பட்ட என்கௌன்ட்டருக்கு மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். சினிமாவும் பல காலமாக அதைத்தான் அதன் மொழியில் சொல்லிக்கொண்டே இருக்கிறது. சாமி முதல் தெறி வரை பல கமர்ஷியல் படங்களில் இதைப் பார்க்க முடியும். மகாராஜா என்னும் old boy அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்பது இங்குதான்‌.

பிளாஷ்பேக் காட்சியில் உடன் இருக்கும் ஒருவன் இத்தகைய குற்றத்தினை செய்யும் போது எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் உணவருந்தும் ஒருவனால் அடுத்த நாள் அவன் மகளை எளிதாகக் கொஞ்ச முடிகிறது‌. காலம் உருண்டோடுகிறது. தன் வாழ்க்கையை கெடுத்தவனை பழி தீர்க்க அந்த வீட்டுக்குள் தயாராய் காத்திருக்கும் போது, எதிரியின் மகள் சிக்கிக் கொள்கிறாள். கொல்வதற்கு முன் இதைச்‌ செய்யலாமே என்கிற ஐடியா ஒருவருக்கு வருகிறது. அப்போதும் இதை பழிதீர்க்கும் யுக்தியாகவே வில்லன் பார்க்கிறான். படம் பார்க்கும் நபர்கள் நிவைகுலையும் அளவுக்கு அந்தக் காட்சி ரிப்பீட் செய்யப்படுகிறது. அப்போதும் எந்த குற்ற உணர்ச்சியும் வில்லனுக்கு இல்லை. இறுதியாக old boy தருணம் உடைபடும் போது வெடித்து அழுகிறானாம். What if scenarioவாக மகள் மாறவில்லை என வைத்துக்கொள்வோம். No குற்ற உணர்ச்சி. சாவைவிட பெரிய தண்டனையை உனக்குக் கொடுத்துவிட்டேன் என வில்லன் ஜெயிக்கும் படமிது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைப் பேசும் ஒரு படத்தில் இத்தகைய what if scenarioக்கள் எல்லாம் ஆபத்தானவை.

படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரம் நல்லதொரு உதாரணம். மகாராஜாவில் வரும் போலீஸ் TVS XL மட்டுமே திருடுவார்‌. காரணம் அவருக்கு gear வண்டி ஓட்டத் தெரியாது. தமிழ்நாடு என்ன உலக அளவிலேயே திருட்டுக்களையும் திருடர்களையும் எளிதாக பிரித்துவிடலாம். பீரோ புல்லிங் செய்பவர்கள் வேறு டெக்னிக் செய்ய மாட்டார்கள். செய்யவும் தெரியாது. ஏனெனில் மாட்டிக் கொள்வார்கள். திருடிய வீட்டில் இவர்களின் முகத்தைப்‌ பார்த்துவிட்டார்கள் என்பதற்காக வீட்டிலிருந்த சிறுமியைக் கொன்று வீட்டை வெடிக்கச் செய்யும் அளவுக்கு குரூர எண்ணம் கொண்டவர்கள். அதிலும் அனுராக் ‘பத்தல பத்தல’ என சொல்லும்போது நமக்குமே பக் என்றுதான் இருக்கிறது. இத்தகைய குற்றங்களுக்கும் கூட 15 ஆண்டுகள்தான் தண்டனை என்பதால் வெளியே வருபவர் இரண்டு பீடோக்களை கூட்டிக் கொண்டு இந்த வீட்டிற்கும் செல்கிறார். எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மூன்று நபர்களால் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சிறுமியை மேலும் காயப்படுத்துகிறார்கள். அதைவிட குரூரம் அதை விவரிக்கும் போது விசேவிடம் சிங்கம்புலி தரும் மாடுலேசன். ஆக இவர்கள் திருடர்களா இல்லை சைக்கோ பாணியிலான சீரியல் கொலை செய்பவர்களா என்கிற தெளிவு எல்லாம் படத்தில் கிடையாது. கதை இலாக்காதான் பிரமாஸ்திரமாக ‘குழந்தை குற்றத்தை ‘ வைத்திருக்கிறதே அது எல்லாவற்றையும் ஈடு செய்துவிடும் என்கிற அதீத நம்பிக்கை இதற்குக் காரணம்.

இன்னும் பச்சையாக வெளிப்படையாகவே சொல்ல வேண்டும் என்றால், மாவீரன் படத்தில் யோகி பாபு சிவா குறித்து ஒரு வசனம் பேசுவார். “இவன் அப்பார்ட்மென்ட்ட உடைச்சு ருசி கண்டு பழகிட்டான். அதனால இங்க இருந்து போகமாட்டான்” என்பார். உண்மையில் தமிழ் சினிமா கதாசிரியர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களை படமாக்குவது பார்வையாளரை கதிகலங்கச் செய்யும் என இவர்கள் நன்கு அறிந்தவர்கள். வறுமையை ரொமான்டிசைஸ் செய்து கொண்டிருந்தவர்கள், ஒருவரின் உடல் குறைபாட்டை ரொமான்ட்டிசைஸ் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களை ரொமான்டிசைஸ் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இது அவர்களுக்கு கைத்தட்டல்களை எளிதாக பெற்றுத் தரக் கூடியது. அதற்காகவே தான் அந்த சிறுமிக்கான ஷாட் அப்படி படமாக்கப்பட்டிருக்கிறது. ராட்சசன் திரைப்படத்திலும் இதே பிரச்சினை உண்டு. ‘எப்படியும் கொல்லத்தான போறீங்க’ என சிங்கம்புலியை பேச வைப்பதும் அதே எண்ணத்தில் தான். ‘மைனா’ ஹிட் ஆனதும் காட்டுக்குள் ஓடிய கோலிவுட், ‘சுப்பிரமணியபுரம்’ ஹிட் ஆனதும் மதுரைக்கு படையெடுத்த கோலிவுட் , இப்போது இதை வைத்து வயிறு வளர்க்க திட்டமிட்டு இருக்கிறது.

இந்திய சினிமாவின் ‘டிரேட் மார்க் ஹிட் ஃபார்முளாவான ஐட்டம் நம்பர் ‘ பாடல்களைப் போலத்தான் இவர்கள் இதை அணுகுகிறார்கள். இப்போதெல்லாம் ஐட்டம் நம்பர் என்றுகூட யாரும் சொல்வதில்லை.

உண்மையில் நீங்கள் மகாராஜா இல்லை குப்பைதான்!

 

  • கார்த்திகேயன்
MaharajaReviewVijay Sethupathyமகாராஜா விமர்சனம்விஜய் சேதுபதி
Comments (0)
Add Comment