சென்னை: அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் சமீப காலமாக வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். அஜித் இப்போது நடித்து வரும் வலிமை படத்தின் புதிய தகவல்களை வெளியிடக் கேட்டு சமூக வலைத் தளங்களில் விதவிதமாக பதிவுகள் இட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒருபடி மேலே போய், தமிழக முதல்வர், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழகம் வந்த பிரதமர் மோடி போன்றவர்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர் இந்த ரசிகர்கள்.

இதனால் கடுப்பாகிப் போன நடிகர் அஜித் விடுத்துள்ள அறிக்கை இது:

என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு பொழுதுபோக்கு உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில், நான் எடுக்கும் முடிவுகள், என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் வைத்துக் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும்,சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.”

– இவ்வாறு அந்த அறிக்கையில் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *